பிரான்சில் காடுகளுக்குள் செல்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

You are currently viewing பிரான்சில் காடுகளுக்குள் செல்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

வீடுகளுக்குள் முடங்கியதால் நீண்ட நாட்கள் இயற்கையை விட்டு விலகி இருந்தவர்கள் மே 11 க்குப் பிறகு காடுகளுக்குள் செல்லலாம் என்ற கனவுடன் உள்ளனர். ஆனால் உடனடியாகக் காடுகளுக்குச் செல்வது ஆபத்தானது என்று பொதுமக்களை எச்சரிக்கின்றது பிரான்ஸின் தேசிய வனவியல் அலுவலகம். (l’Office national des forêt-ONF)..

கடந்த மார்ச் நடுப்பகுதியில் இருந்து மனித நடமாட்டம், வாகன சத்தம் சந்தடிகள் இன்றி காடுகளில் அமைதி நிலவுவதால் காட்டு விலங்குகள் பலவும் வெளியே வந்து தம் இஷ்டத்துக்கு நடமாடப் பழகிவிட்டன. பட்டப்பகலிலும் காட்டுப்பாதைகளில் அவற்றைக் காணமுடிகிறது என்று வன அலுவலர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் தற்போதைய இளவேனில் காலம் வன விலங்குகள் இனப்பெருக்கம் செய்யும் காலப்பகுதி ஆகும். இப்போது வழமைக்கு மாறாகக் கிடைத்திருக்கும் அமைதி அவற்றின் இனப்பெருக்கத்துக்கு பெரு வாய்ப்பாகியுள்ளது. இனப்பெருக்க காலப்பகுதியில் வன விலங்குகள் அதிக உணர்வுத்திறனுடன் காணப்படுவது வழக்கம். அவை அஞ்சுவது அரிதாக இருக்கும். எனவே காடுகளுக்குள் செல்வதாயின் அவதானம் அவசியம்.

நாய்கள் போன்ற வளர்ப்புப் பிராணிகளை தம்முடன் கொண்டு செல்வோர் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

-இவ்வாறு வனவியல் அலுவலகம் ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

கடந்த பல நாட்களாக வாகன நடமாட்டங்கள் இல்லாமற் போனதால் மான்கள் போன்ற விலங்குகள் கண்டபடி வீதிகளைக் கடக்கவும், வீதிகளுக்கு குறுக்கே ஆங்காங்கே நடமாடவும் பழகிவிட்டன. எனவே காடுகளுக்கு அருகே வாகனங்களைச் செலுத்துவோர் வன விலங்குகளை மோதிவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கையுடன் செலுத்துமாறு வனவியல் அலுவலகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

பிரான்ஸில் மக்கள் சுற்றுலா சென்று இயற்கையை ரசிக்கக்கூடிய வனங்கள் பல நாடு முழுவதும் உள்ளன. நாளை பொது முடக்கம் முடிவுக்கு வருகின்ற நிலையிலும் பூங்காக்கள் மற்றும் காடுகளுக்கு செல்வதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. அந்தந்தப் பகுதி பொலீஸ் நிர்வாகத்தின் அனுமதி கிடைக்கும்வரை காடுகளுக்குச் செல்லக் காத்திருக்க வேண்டிய நிலைமையே உள்ளது.

10-05-2020

(குமாரதாஸன்)

பிரான்சில் காடுகளுக்குள் செல்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை! 1
பகிர்ந்துகொள்ள