பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை!!கவிதை

You are currently viewing பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை!!கவிதை

பொத்துவில் தொடக்கம்
பொலிகண்டி வரை
நித்தம் சாவு கண்ட பூமி!
புத்ததேசம் தினமும் விழுங்கி ஏப்பமிடும்
தமிழர் தேசம்!
இதற்காகத்தான்
இளமைகளை ஈர்ந்து
ஈகம் புரிந்தனர்
தமிழீழ விடியலின்
தீரர்!


தமிழின அழிப்பு நடந்து
தசாப்தம் ஒன்றை கடந்தது
காலம்!
கசாப்பு கடையாய் போனவரின் வாழ்வில்
இன்னும் நீதியில்லை
பார் செய்த பாவம்!
மீதியாய் எஞ்சியோரில்
வீழ்ந்தது கூனல்!
யாருமே இல்லாமல் போனோருக்கு
புலமே ஆறுதல்!


நீதி வேண்டுமென
ஐநா முன்றலிலே
ஆண்டுதோறும்
நடந்தது யாகம்!
குளிர் பனியென
பாராது ஊருராய்
உருண்டது ஈருருளி
மனிதநேயப்
பயணம்!
ஆனாலும்
மக்களால் தெரிவாகிய
தமிழ் மந்திரிகளின்
சுயலப்பார்வையால்
நலிந்தது எம்மவர்
தியாகம்!

தன் இனத்திற்கு
சிறீலங்காவால்
நிகழ்ந்தது இனவழிப்பு
இல்லையென்றார்!
அவர்களின் மீட்பராய்
கால அவகாசத்தை
தாவென்றும் சொன்னார்!

பதினொரு ஆண்டுகளாய்
பாதம் கழுவிக் சுவைத்தவர்!
நெறிதவறாக் கொள்கையரை நகைத்தார்!

இன்று
பொத்துவில் தொடக்கம்
பொலிகண்டி வரை
எழுச்சிப்பேரணியின்
தோற்றுவிப்பாளராய்
உரிமைப்பேரணியிலே
திகழ்ந்தார்!

அதிரடிப்படையின்
பாதுகாப்பில் பதுங்கியவாறு
இராணுவமே வெளியேறு
என்ற கோசத்திலே
முதுகெலும்பில்லாத
இவர்களும் கலந்தார்!

இன்னொருவர்
இனவழிப்பு செய்த
மகிந்தாவின் கட்சியிலே
இணைந்தார்!
பின்பு
தமிழ்த்தேசியக் கட்சியில்
தாவினார்!

இப்போது
என்னவென்றால்
இவர்கள் இனத்தின்
தலைவர்கள் போல்
சிலர் ஊதிப்பெருப்பித்து
மகிழ்கிறார்!

நிறைவாய்
சில வரிகள்
இதுதான்
எப்போதும்
நேரியவருக்கு
இருக்கவேண்டிய
அறிகுறிகள்!

எம்மை அழித்தவனோடு
கைகோர்க்கும் எவனும்
எமக்கானவன் அல்ல!
தங்கள் தேவைகளுக்காக
விம்பங்களாக வருபவர்கள்
நியங்களாக முடியாது!
காலத்திற்கு ஏற்றால்ப்போல்
வர்ணங்களை மாற்றும்
பச்சோந்திகள்
ஒருபோதும்
சிறுத்தைகளாக முடியாது!
வாழ்ந்தால் கவரிமானாக
வாழவேண்டும்!
இவைகளொன்றுமில்லாமல்!
நீ சாதாரண மனிதனுக்கே
ஒப்பில்லாதவன்!

✍தூயவன்


பகிர்ந்துகொள்ள