ஈழ விடுதலை போராட்டத்தில் முதல்வித்தான, பொன். சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நேற்று பொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு நாள் ஆகும். நேற்று ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால், இன்று காலை பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இன்று பொன். சிவகுமாரனின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர்.
உரும்பிராயில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று காலை 8.30 மணியளவில் தமிழ்த் தேசிய கட்சியினர், பொன். சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வட மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
அதேவேளை, உரும்பிராய் – வேப்பம்பிராய் வீதியில் அமைந்துள்ள மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று காலை 9 மணிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பென்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் வி. மணிவண்ணன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதனிடையே, உரும்பிராய் பொதுச்சந்தையில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் உருவச் சிலை அமைந்துள்ள இடத்தில் இன்று காலை 9.30 மணியளவில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)