உக்ரைன் விடயத்தில் ரஷ்யாமீது பொருளாதாரத்தடைகளை விதிப்பதால், சமாதானமோ, பாதுகாப்போ கொண்டுவரப்பட முடியாதென சீனா தெரிவித்துள்ளது.
உக்ரைன் விடயத்தில் இதுவரை கருத்தேதும் தெரிவிக்காமல் அமைதி காத்துவந்த சீனா, நேற்று முதன்முறையாக தனது கருத்தை தெரிவித்திருந்த நிலையில், இன்று (09.03.2022) சீனா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதோடு, தனது இக்கருத்தை அமெரிக்க முக்கியமானதொன்றாக பார்க்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாமீதான மேற்குலகின் பொருளாதாரத்தடைகள், ரஷ்யாமீது தொடுக்கப்பட்டுள்ள பொருளாதரப்போராகவே தான் கருதுவதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ள நிலையில், சீனாவின் இவ்வறிக்கைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ரஷ்ய – உக்ரைன் சிக்கல்களுக்கு சமாதானமான முறையில் தீர்வு காணுவதற்கான வாய்ப்புக்கள் அரிதென மேற்குலகம் கருதும் நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போர்நிறுத்தமொன்றுக்கு சீனா ஆதரவளிக்குமென தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், இன்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில் நேட்டோ அமைப்பை கடுமையாக சாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கான ஊக்குவிப்பை நேட்டோ தொடர்ந்தும் வழங்கி வருகிறதென சாடியிருக்கும் சீன அறிக்கை, ரஷ்யாமீதான மேற்குலகின் பொருளாதாரத்தடைகள், சமாதானத்தையும், அமைதியையும் கொண்டுவருவதற்கு எவ்விதத்திலும் உதவா எனவும், அதேவேளை, குறித்த பொருளாதாரத்தடைகள், சம்பந்தப்பட்ட நாடுகளை வெகுவாக பாதிக்குமெனவும் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் விடயத்தில் ரஷ்யாமீது கணடனமேதும் இதுவரை தெரிவிக்காத சீனா, ரஷ்யாவுடனான தனது வழமையான வர்த்தக ஒத்துழைப்புக்களை தடையில்லாமல் மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.