ரஷ்ய வசமான உக்ரைனின் அணுஉலைகள்! ஊதிப்பெருக்கும் மேற்குலக ஊடகங்கள்!!

You are currently viewing ரஷ்ய வசமான உக்ரைனின் அணுஉலைகள்! ஊதிப்பெருக்கும் மேற்குலக ஊடகங்கள்!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை நடவடிக்கைகளின்போது, உக்ரைனின் “Tsjernobyl” மற்றும் “Zaporizjzja” ஆகிய அணு உலைகள் முற்றாக ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பல நாட்களாகின்றன. இந்நிலையில், குறித்த அணுஉலைகள் தொடர்ந்தும் பாதுகாப்பாக இருக்கும் நிலையிலும், அனுமதிக்கப்பட்ட அளவையும் விட, அதிகளவான கதிர் வீச்சுக்கள் ஏதும் இவற்றிலிருந்து வெளிவரவில்லையென கடந்த வாரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் மேற்குல ஊடகங்கள் இவ்விடயத்தை பெரும்பேசு பொருளாக்க தலைப்பட்டிருக்கின்றன.

1986 ஆம் ஆண்டில் “Tsjernobyl” அணுஉலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கதிர்வீச்சு பெருத்த சேதங்களை விளைவித்தததையடுத்து, சேதமான குறித்த அணுஉலையில் பகுதி மேலும் கதிர்வீச்சு ஏற்படாவண்ணம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச அணுசக்தி மையமானது குறித்த அணுஉலையை தனது தொலைதூர கண்காணிப்புக்குள் கொண்டுவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இப்போது, உக்ரைன் மீதான படை நடவடிக்கையின்போது மேற்படி இரு அணுஉலைகளும் ரஷ்யப்படைகளின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதன்பின் “Tsjernobyl” அணுஉலையுடனான தனது தொலைதூர கண்காணிப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அணுமையம் தெரிவித்துள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ள மேற்குலக ஊடகங்கள், ரஷ்யா பெரும் அணுஉலை விபத்தொன்றை வேண்டுமென்றே உருவாக்க இருக்கிறது என்கிற கருத்தை மறைமுகமாக மக்கள் மத்தியில் விதைக்கும் வகையில் செய்திகளை வெளியிடுகின்றனவா என்ற விசனம் எழுந்துள்ளது.

குறித்த அணுஉலைகள் ரஷ்யப்படைகளினால் கைப்பற்றப்பட்டதிலிருந்து, அணுஉலைகளுக்குள் வெடிகுண்டுகள் வீசப்பட்டன; அங்கு துப்பாக்கிச்சூடுகள் நிகழ்த்தப்படுகின்றன; ரஷ்யப்படைகள் அவ்விடங்களில் அவதானத்தோடு நடந்துகொள்ளவில்லை என்பது போன்ற தகவல்களை உக்ரைன் சர்வதேசத்துக்கு தெரிவித்து வந்தமை நினைவிருக்கலாம். உக்ரைனின் இத்தகவல்களையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், உலைகளிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமான கதிர்வீச்செதுவும் பதிவு செய்யப்படவில்லை என காட்டின. ஆக, அணுஉலைகளில் ஆபத்தான சேதங்கள் ஏதும் ஏற்பட்டமைக்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், உக்ரைனின் மேற்படி செய்திகளுக்கான முக்கியத்துவம் படிப்படியாக இழக்கப்பட்டிருந்தது.

ரஷ்ய வசமான உக்ரைனின் அணுஉலைகள்! ஊதிப்பெருக்கும் மேற்குலக ஊடகங்கள்!! 1
பாதுகாப்பாக மூடப்பட்டுள்ள “Tsjernobyl” அணுஉலை.

இப்போது, “Tsjernobyl” அணுஉலையுடனான தனது தொலைதூர கண்காணிப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி மையம் தெரிவித்துள்ளதை வைத்து மீண்டும் மேற்குலக ஊடகங்கள் இவ்விடயத்தை கையிலெடுத்துள்ளன. மீண்டும் ஒரு அணுக்கசிவு பேராபத்து காத்திருக்கிறது; உலகமே பயப்படுகிறது என்பதுபோல் தலைப்பிட்டு செய்திகளை வெளியிடுவதன்மூலம், அணுக்கசிவொன்றை ஏற்படுத்தி, மனிதகுலத்துக்கு பெரும் அழிவை ஏற்படுத்த ரஷ்யா முனைகிறது என்கிற மிக ஆபத்தான கருத்தை மக்கள் மத்தியில் விதைப்பதன் மூலம் தீவிரமான ரஷ்ய எதிர்ப்பை கட்டியெழுப்பும் ஊடக அரசியல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதையே இது சுட்டி நிற்கிறது.

ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீதான மேற்குலகத்தின் ஆக்கிரமிப்புக்களுக்கு முன்னதாக இந்த ஊடகங்கள் மேற்கொண்டிருந்த பரப்புரை அரசியல், மேற்படி நாடுகள் மீதான ஆக்கிரமிப்புக்கள் சரியானவையே என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்கப்படுவதற்கு பேருதவியாக இருந்திருந்தன. இப்போது, ரஷ்ய அதிபர் மிகமிக ஆபத்தானவர், அவரை யாராவது கொல்ல வேண்டும் என, அமெரிக்க செனட்டரான “Linsey Graham” தனது டுவீட்டர் பக்கத்தில் பகிரங்கமாக பதிவிட்டுள்ளது, அதிபர் புதின் தொடர்பில் மேற்குலகம் என்ன நினைக்கிறது என்பதற்கான உதாரணமாகவும் எடுத்துக்கொள்ளலாம். இதேபோன்ற பதிவுகள், செய்திகள் மூலமாகவே ஈராக்கிய அதிபர் “சதாம் ஹுசைன்”, லிபிய அதிபர் “மு அம்மர் கடாபி” போன்றவர்கள் மனிதகுலத்துக்கு எதிரானவர்களாக கட்டமைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார்கள்.

ஜப்பானின் “ஹிரோஷிமா” / “நாகசாகி” நகரங்கள் மீதான அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சுக்களுக்கு பின்னதாக, அணுஉலை விபத்து ஒன்று ஏற்படுத்தக்கூடிய பேரழிவை உலகத்துக்கும், ரஷ்யாவுக்கும் புரியவைத்தது ” “Tsjernobyl” அணுஉலை விபத்தே. அந்த விபத்திலிருந்து அப்பிரதேசம் இன்னமும் முழுமையான மீட்சி பெறமுடியாமலிருக்கும் இந்நிலையில், குறித்த அணுஉலைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யா, இது விடயத்தில் மிகமிக அவதானமாகவே இருக்கும். அணுக்கசிவு வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுமானால் அதனால் ரஷ்யாவும் பாதிக்கப்படும் என்பதோடு, அவ்வாறான நிலையொன்றை ரஷ்யாவே ஏற்படுத்துமானால், அது ரஷ்யாவின் நிரந்தர முடிவுக்கு வழிகோலும் என்பதை அறியாதவறல்ல அதிபர் புதின்.

ரஷ்ய வசமான உக்ரைனின் அணுஉலைகள்! ஊதிப்பெருக்கும் மேற்குலக ஊடகங்கள்!! 2
இயங்கிக்கொண்டிருக்கும் “Zaporizjzja” அணுஉலை.

நோர்வேயின் அணு மற்றும் கதிர்வீச்சு கட்டுப்பாட்டு மையத்தின் தற்காலிக இயக்குனர் “Ingar Amundsen” தெரிவிக்கும்போது, செயலிழந்த நிலையில் இருக்கும் “Tsjernobyl” அணுஉலையால் பாதிப்பேதும் வருவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவென்றும், எனினும் இயங்கிக்கொண்டிருக்கும் “Zaporizjzja” அணுஉலைக்கு போரின் காரணமாக அதன் கட்டமைப்பில் சேதங்கள் ஏற்பட்டாலோ, குறிப்பாக அணுஉலையை குளிர்விக்கும் தங்குதடையில்லாத நீரோட்டம் பாதிக்கப்பட்டாலோ அல்லது அதன் இயக்கத்துக்கு தேவையான மின்சக்தி தடைப்பட்டாலோ மாத்திரமே அணுக்கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

கடுமையான போர்ச்சூழலுக்குள்ளும் “Zaporizjzja” அணுஉலை இயங்க வைக்கப்படுகிறது என்றால், அதை இயக்குவதற்கான ஏதுநிலையும், பாதுகாப்பான சூழ்நிலையும் இருப்பதாலேயே, அதை இயக்குபவர்களால் உலையை இயக்க முடிகிறது என்று, நோர்வேயின் அணு மற்றும் கதிர்வீச்சு கட்டுப்பாட்டு மையத்தின் தற்காலிக இயக்குனர் “Ingar Amundsen” தெரிவித்திருப்பதே, எவ்வாறான மனோநிலையில் மேற்குலக ஊடகங்கள் மக்கள் மத்தியில் எவ்வாறான கருத்துருவாக்கத்தை விதைக்க விழைகின்றன என்பதை தெளிவாக்குகிறது.

குகன் யோகராஜா

09.03.2022

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments