பொலிசாரின் சட்டவிரோத உத்தரவுகளை ஒருபோதும் மதிக்க மாட்டோம்!

You are currently viewing பொலிசாரின் சட்டவிரோத உத்தரவுகளை ஒருபோதும் மதிக்க மாட்டோம்!

நீதிமன்றக் கட்டளையை மதிக்கத் தயார். ஆனால் பொலிசாரின் சட்டவிரோத உத்தரவுகளுக்குக் கட்டுப்பட முடியாது. போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் வழங்கிய கட்டளை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஷ், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கு எதிராக ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கட்டளையிலே 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் திஸ்ஸ மகா விகாரைக்கு அண்மையில் சொத்துக்களுக்கு அல்லது ஆட்களுக்கோ எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படக் கூடாது என்ற கரிசினையில் பின்வரும் கட்டளை மன்றினால் கட்டளையாக்கப் படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் திஸ்ஸ விகாரையில் நடைபெறவிருக்கும் கஜினமகா உற்சவத்திற்கு தடைகளோ குழப்பங்களோ ஏற்படுத்தக் கூடாது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியலமைப்பின் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் வகையில் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது சொத்துக்களுக்கோ ஆட்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலோ செயல்படக்கூடாது என்று நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

நாங்கள் நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பதற்கு முன்பாகவே இந்த விடயங்களை அனுசரித்து தான் போராடிக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் நீதிமன்றத்தினுடைய கட்டளையை மதிக்க தயார், ஆனால் இங்கே வந்திருக்கின்ற பொலிசார் நீதிமன்றத்தின் கட்டளைக்கு மேலதிகமாக கோஷங்களை எழுப்பக் கூடாது என்றும் நாங்கள் எழுப்புகின்ற கோஷங்கள் சிங்கள மக்களுக்கும் சிங்கள பக்தர்களுக்கும் மன உளைச்சல்களை ஏற்படுத்தக் கூடாது என்றும் புதிதாக சில சட்ட விதிகளை ஏற்படுத்த பார்க்கின்றார்கள். இவற்றுக்கு நாங்கள் அடிபணிய போவது கிடையாது.

நீதிமன்றத்தின் கட்டளையை நாங்கள் மதிக்க தயார். ஆனால் பொலிசாருடைய சட்டவிரோதமான கட்டளைகளை நாங்கள் மதிக்க தயார் இல்லை. ஏனென்றால் இங்கு மன உளைச்சல் ஏற்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கும் காணி உரிமையாளர்களுக்கும்தான். ஏனென்றால் எங்களுடைய மக்களுக்கு சொந்தமான, தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை அபகரித்து தான் சட்ட விரோத விகாரை கட்டப்பட்டு இருக்கின்றது.

இந்த விகாரையில் கொண்டாட்டங்கள் நடக்கின்றபடியால் எங்களுடைய மக்களுக்கு தான் மன உளைச்சலே தவிர சிங்கள மக்களுக்கு அல்ல. எங்களுடைய காணியை பிடித்து விட்டு நீங்கள் வந்து கொண்டாடும்போது நாங்கள் கோஷம் எழுப்பினால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுமானால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை. மீளவும் செல்கின்றோம் நாங்கள் நீதிமன்றத்தினுடைய கட்டளையை மதிக்க தயார் ஆனால் பொலிசாருடைய சட்ட விரோதமான உத்தரவுகளை ஒருபோதும் மதிக்கவும் மாட்டோம் செயல்படுத்தவும் மாட்டோம் போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply