இலங்கையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் அமைதியான போராட்டங்களின் போது கருத்து வெளியிடுவதற்கான அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அவசரகால பிரகடனம் மற்றும் சமூக ஊடக தளங்களுக்கான தடையுத்தரவு ஆகியவை தொடர்பில் தாம் கவலைப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்பாடுகள், மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள், மின்சாரம், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்காததால் மேற்கொள்ளப்படும் அமைதியான போராட்டங்களின் நோக்கத்தை குறைப்பது அல்லது தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.இவை கண்டிக்கத்தக்கவை.
இந்தநிலையில் மாணவர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் பிறரை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்குமாறும், அவர்கள் தமது அரசியல் கருத்துக்களை சுதந்திரமாகப் பகிர்ந்துகொள்ளவும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தவும் அனுமதிக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை தாம் கேட்டுக்கொள்வதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தடைகளை விடுத்து இலங்கை மக்களுடன் ஆக்கபூர்வமான மற்றும் வெளிப்படையான உரையாடலில் ஈடுபடுமாறு நிபுணர்கள் இலங்கையின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் சங்கத்தின் சுதந்திரத்திற்கான உரிமைகள் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ட் நியாலெட்சோசி வோல் உட்பட்ட 6 நிபுணர்கள் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.