இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மேற்கத்திய நாடுகள் பலவும் தெளிவாக இரட்டை வேடங்கள் போடுகின்றன என ஜோர்டான் ராணி கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையிலான போர் தாக்குதல் கடந்த 7ம் திகதி தொடங்கி 3வது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் வரை ஓய மாட்டோம் என சூளுரைத்து காசாவை இஸ்ரேல் நாசமாக்கி வருகிறது, இதற்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா-வில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தையும் அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோல்வியடைய செய்தது.
இந்நிலையில் இந்த போர் நடவடிக்கை குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜோர்டான் ராணி ரானியா அல் அப்துல்லா (Rania Al Abdullah), பெரும்பாலான உலக நாடுகள் இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன. அத்துடன் தற்காப்பு உரிமைக்கு ஆதரவு தெரிவித்து ஹமாஸின் தாக்குதலை கண்டித்தனர்.
மேலும் ஹமாஸ் தாக்குதலில் 1400 பேர் இஸ்ரேலில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து இஸ்ரேல் மீதான தங்களது கவலைகளை உலக நாடுகள் வெளிப்படுத்தி வந்தனர்.
ஆனால் பதிலடி தாக்குதலை நடத்த தொடங்கிய இஸ்ரேல் இதுவரை 6000 பொதுமக்களை கொன்றுள்ளனர், அதில் 2,400 பேர் சிறுவர்கள், இந்த வழிமுறை எப்படி தற்காப்பு தாக்குதல் ஆகும். குடும்பத்தை துப்பாக்கியால் கொல்வது தவறு, ஆனால் ஷெல் கொண்டு கொண்டு கொலை செய்தால் மட்டும் சரியா? என இஸ்ரேலிய தாக்குதல் குறித்து ஜோர்டான் ராணி ரானியா அல் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இஸ்ரேல் உட்பட ஒவ்வொரு நாடு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு, ஆனால் அந்த உரிமை போர் மூலம் அல்ல, பேச்சுவார்த்தைகள் மூலமே.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டு வர சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைவது மட்டுமே வழி என்றும் ஜோர்டான் ராணி ரானியா அல் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதேவேளை
இந்த போர் நடவடிக்கையில் மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் போர் குறித்து தெரிவித்த கருத்து வைரலானது.
அதில், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் ஒரு எதிர்வினை தான் என அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இதனால் இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு தரப்பினர் மத்தியில் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் ஹமாஸ் தொடர்பான தன்னுடைய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹமாஸ் படையினரின் பயங்கரவாதத்தை தான் நியாயப்படுத்தவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான தகவல்கள் முழுவதும் பொய், உண்மையில் நான் எதிர் மாறான கருத்தை தான் கூறினேன் என்று ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்தாக பிபிசி குறிப்பிட்டுள்ளது.