துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகள் அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், ஏஜியன் அல்லது கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் ஏற்படக்கூடிய இராணுவ நடவடிக்கைகள் போரில் முடிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 2023 ஜூன் மாதம் துருக்கியிலும் கிரேக்கத்திலும் தேர்தல் முன்னெடுக்கப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி துருக்கி ஜனாதிபதி படையெடுப்பை முன்னெடுக்கக் கூடும் என கிரீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவிக்கையில், நீங்கள் எல்லை மீறி செல்வதாக இருந்தால், ஒரு நாள் இரவு நாங்கள் திடீரென்று வருவோம், அதற்கான விலை மிக அதிகமாக இருக்கும் என்றார்.
இந்த நிலையில், முன்னாள் கிரேக்க தளபதி ஒருவர் தெரிவிக்கையில், 2019 முதல் 2021 வரையில் இரு நாடுகளுக்கும் இடையே போருக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றே தாம் கருதியதாகவும், ஆனால் தற்போதைய சூழலில் அந்த உறுதியை தம்மால் அளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி, ஒரு போருக்கான சூழலை திட்டமிட்டு உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய சூழல் பலவீனமடைந்துள்ளதாகவும், சமாளித்துவிடும் நம்பிக்கை இருப்பதாகவும் ஏதென்ஸில் உள்ள துருக்கியின் உயர்மட்ட இராஜதந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1996ல் இருந்தே மக்கள் வசிக்காத கிரேக்க தீவுகளை குறிவைத்து வருகிறது துருக்கி. ஆனால் கடந்த ஆண்டு, மக்கள் வசிக்கும் கிழக்கு ஏஜியன் தீவுகளின் மீது கிரேக்க இறையாண்மையை வெளிப்படையாக மறுக்கத் தொடங்கியது.
இதனிடையே ஏஜியன் கடற் பகுதியில் இராணுவத்தை குவிக்கும் நடவடிக்கைகளை கிரேக்கம் கைவிட வேண்டும் என ஜூன் மாதம் எர்டோகன் கோரிக்கை வைத்துள்ளார்.
மட்டுமின்றி, ஏஜியன் பகுதியில் படையெடுக்கும் சூழல் உருவாகும் என ஆகஸ்டு மாதம் அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். மேலும், நீங்கள் ஆக்கிரமித்துள்ள தீவுகள் எங்களை கட்டுப்படுத்தாது, நேரம் வரும்போது தேவையானதை நாங்கள் செய்வோம் எனவும் அவர் வெளிப்படையாக எச்சரித்தார்.