போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச மேற்பார்வையை கோருமாறு பிரித்தானிய நாடாளுமன்றில் பிரேரணை!

You are currently viewing போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச மேற்பார்வையை கோருமாறு பிரித்தானிய நாடாளுமன்றில் பிரேரணை!

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின்போது சர்வதேச சட்ட நியமங்களை முறையாகப் பேணுமாறும், பக்கச்சார்பற்ற நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் வகையில் சர்வதேச மேற்பார்வையைக் கோருமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜோர்ஜ் கலோவேயினால் பிரிட்டன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இத்தீர்மானத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இது குறிப்பாகத் தமிழ்மக்களை வெகுவாகப் பாதித்த பெரும் எண்ணிக்கையான உயிரிழப்புக்களுக்கும், இடப்பெயர்வுக்கும் வழிகோலிய யுத்த நிறைவை நினைவுறுத்துகின்றது.

இந்த யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உயிர்களையும் நினைவுகூர்ந்து, இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் துன்பங்களைப் புரிந்துகொள்ளும் அதேவேளை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின்போது சர்வதேச சட்ட நியமங்களை முறையாகப் பேணுமாறும், பக்கச்சார்பற்ற நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் வகையில் சர்வதேச மேற்பார்வையைக் கோருமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்கும், நல்லிணக்க முயற்சிகளுக்கும் சர்வதேச சமூகம் தொடர்ந்து ஆதரவளிப்பதை ஊக்குவிப்பதுடன், நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் அனைத்து இனக்குழுக்களுக்குமான கௌரவத்தை உறுதிப்படுத்தல் ஆகியவற்றில் பிரிட்டனின் வகிபாகத்தை மீளவலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று இலங்கையில் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் மனித உரிமைகள் சார் சவால்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், கலந்துரையாடல்களைக் கட்டியெழுப்புவதிலும் முன்னின்று செயற்படும் பிரிட்டன்வாழ் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் பங்களிப்பை வரவேற்கின்றோம்.

இந்நிலையில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்திட்டங்களுக்கும், சர்வதேச மீள் கட்டியெழுப்பல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் பிரிட்டன் அரசாங்கம் வழங்கிவரும் ஆதரவை மேலும் விரிவுபடுத்தவேண்டும் எனப் பரிந்துரைக்கின்றோம்.

அத்தோடு இலங்கை வாழ் தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய நிலைவரத்தை மதிப்பீடு செய்வதற்கும், மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான உலகளாவிய முயற்சிகளில் பிரிட்டனின் வகிபாகத்தை ஆராய்வதற்கும் இவ்வவையில் ஒரு விவாதம் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோருகின்றோம் என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments