போலந்திற்கான ரஷ்ய தூதர் போர் எதிர்ப்பு ஆர்ப்பட்ட்டக்கார்களால் சிவப்பு திரவத்தால் தாக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது இறந்த சோவியத் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த நிகழ்ச்சிக்கு திங்களன்று வந்தபோது, எதிர்ப்பாளர்கள் போலந்திற்கான ரஷ்யாவின் தூதர் செர்ஜி ஆண்ட்ரீவ் மீது சிவப்பு திரவத்தைக் கொண்டு தாக்கினர்.
உக்ரைனியக் கொடிகளுடன், பாசிஸ்டுகள் மற்றும் கொலையாளிகள் என்று கோபத்துடன் கத்திக்கொண்டு நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆண்ட்ரீவை சூழ்ந்தனர்.
மரியாதை செலுத்தவந்த தூதரையும் மற்றவர்களையும் தங்கள் மலர்களை வைப்பதை போராட்டக்காரர்கள் தடுத்தனர். அதனைத் தொடர்ந்து பொலிசார் தூதரையும் மற்றும் அவரது தூதுக்குழுவை சோவியத் இராணுவ கல்லறையிலிருந்து அழைத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் நியோ நாசிசத்தின் அபிமானிகள் என்று ரஷ்யா கூறுகிறது.
ரஷ்ய தூதரகம் இந்த ஆண்டு வெற்றி தினத்தை குறிக்கும் வகையில் போலந்து தலைநகரில் அணிவகுப்பு நடத்துவதற்கான அதன் திட்டங்களை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதற்கு பதிலாக கல்லறையில் மலர்வளையம் வைக்கும் விழாவை ஏற்பாடு செய்தது. கல்லறையில் பூக்கள் வைப்பதற்கு எதிராக போலந்து அரசாங்கம் ரஷ்ய தூதருக்கு முன்பே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா இந்த சம்பவத்தை கண்டித்து, வெளியுறவு அமைச்சகம் போலந்து அதிகாரிகளுடன் “இளம் நவ-நாஜிக்களுக்கு அவர்களின் ஈடுபாட்டிற்காக” எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார்.