மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குங்கள்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

You are currently viewing மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குங்கள்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உரியவாறான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டுமே தவிர, தமது உரிமைகளைக்கோரிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதில் அவதானம் செலுத்தக்கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

பாரிய பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கடந்த சில மாதங்களாக நாட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த மக்களின் தன்னெழுச்சிப்போராட்டத்தின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதுடன், பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் போராட்டத்தில் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்கள் பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மீனாக்ஷி கங்குலி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

தற்போது நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியான நீதியை வழங்குவதில் விசேடமாகக் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, தமது உரிமைகளை வலியுறுத்திப் போராடியவர்களைத் தண்டிப்பதில் அவதானம் செலுத்தக்கூடாது.

போர்க்குற்றங்கள் மற்றும் ஊழல்மோடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதே முன்னுரிமைக்குரிய விடயமாகும்’ என்று அவர் அப்பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply