நோர்வேயின் பிரபலமான இலத்திரனியல் பாவனைப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களான “Elkjøp” மற்றும் “Power” ஆகிய நிறுவனங்கள், பொதுமக்களை ஏமாற்றி வருவதாக அண்மையில் குற்றம் சட்டப்பட்டிருந்தது.
மேற்படி நிறுவனங்களின் முகாமைத்துவம் தொடர்பான பணிகளில் அமர்த்தப்பட்டு, இப்போது விடுப்பு பெற்றுள்ள முன்னாள் அலுவலர் ஒருவர், இந்நிறுவனங்கள் மீதான மேற்படி குற்றச்சாட்டு உண்மையானதென தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நோர்வேயை பொறுத்தவரை, ஒரு பாவனைப்பொருளை வாங்க விரும்புபவர்கள், அதே பொருள் வேறெங்காவது குறைந்தவிலையில் கிடைக்குமாவென இணையத்தில் சரிபார்த்துக்கொள்ள முடியும். இதற்கு, குறித்த பாவனைப்பொருளின் “சந்தை குறியீட்டு இலக்கங்கள்” (Item Code) அத்தியாவசியமானது. இக்குறியீட்டை வைத்தே ஒரு பொருளின் விலையை பல இடங்களில் ஒப்பீடு செய்துகொள்ள முடியும்.
எனினும், மேற்கூறப்பட்ட இரு நிறுவனங்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான பொருட்களுக்கு வேறுவேறான “சந்தை குறியீட்டு இலக்கங்களை” தயாரித்து விற்பனை செய்தகவும், இதன்மூலம் “சந்தை குறியீட்டு இலக்கத்தை” வைத்து வேறுவேறு இடங்களில் விலையை ஒப்பீடு செய்வதை வேண்டுமென்றே இந்நிறுவனங்கள் தடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படும் அதேவேளை, ஏறத்தாழ ஒரே மாதிரியான பொருட்களை மிகுந்த விலை வித்தியாசத்தில் இந்நிறுவனங்கள் விற்பனை செய்து வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஒரே மாதிரியான இரு தொலைக்காட்சி சாதனங்களில் எதோ ஒரு இடத்தில் வண்ணத்தில், அல்லது வடிவமைப்பில் மட்டும் மிகச்சிறிய மாற்றத்தை செய்துவிட்டு, அவற்றுக்கு வேறுவேறான “சந்தை குறியீட்டு இலக்கத்தை” கொடுத்துவிடுவதால் இத்தொலைக்காட்சி சாதனங்கள் “வேறு வேறு பொருட்கள்” என்ற வகைக்குள் அடங்கிவிடும். எனினும், தரத்திலோ அல்லது உள்ளடக்கத்திலோ இச்சாதனங்கள் ஒரே மாதிரியானவையாகவே இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இம்முறைகேடான வழிமுறையை பாவித்து, இவ்விரு நிறுவனங்களும் பாவனைப்பொருட்களின் விலைகளை வேறிடங்களில் பொதுமக்கள் ஒப்பீடு செய்து பார்ப்பதை தடுத்துள்ளதோடு, அனாவசியமான விலையேற்றத்தையும் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தவிரவும், “பண்டிகைக்கால மலிவு விற்பனை” என்னும் போர்வையில், பொருட்களின் விலைகளில் மாற்றம் செய்து விற்றதாகவும், வழமையாக விற்கப்பட்ட விலையிலும் பார்க்க, “மலிவு விற்பனை” யின்போது அதிக விலையில் சில பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி குற்றச்சட்டுக்கள் தொடர்பில் இந்நிறுவனங்களிடம் வினவப்பட்டபோது, விலைகளை நிர்ணயிக்கும்போதும், “மலிவுவிலை” விற்பனைக்கான பொருட்களை தெரிவு செய்யும்போதும் நடைபெற்ற கணிணித்தவறுகளே மேற்படி விடயங்களுக்கு காரணமெனவும் மேற்படி இரு நிறுவனங்களும் ஒரே மாதிரியான காரணங்களை தெரிவித்துள்ளன.
பொதுமக்கள் இதுவிடயத்தில் அவதானமாக இருக்கவேண்டும்!