மசூதி மீது ஏவுகணை தாக்குதல்; 100 பேர் பலி!

  • Post author:
You are currently viewing மசூதி மீது ஏவுகணை தாக்குதல்; 100 பேர் பலி!

ஏமனில் மசூதி மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஏமன் நாட்டில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவு ஹுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்பின் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு சனா நகரை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  தொடர்ந்து அரசுக்கு எதிரான போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.  பலர் தங்களது வீடுகளை விட்டு விட்டு இடம் பெயர்ந்து சென்றனர்.

இதனால் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக சவுதி தலைமையிலான கூட்டணி படைகள் ஏமன் அரசுக்கு ஆதரவாக பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.  கடந்த சில மாதங்களாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுக்கு இடையே போர் எதுவுமின்றி அமைதியான சூழ்நிலை நிலவியது.

இதனிடையே தலைநகர் சனாவில் இருந்து கிழக்கே 170 கி.மீட்டர்கள் தொலைவில் மத்திய மாரீப் மாகாணத்தில் அமைந்த ராணுவ முகாமில் உள்ள மசூதியில் மாலைநேர பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த மசூதி மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் திடீரென ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் வழியே தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.  148 பேர் காயமடைந்தனர்.  இதுபற்றி அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மசூதி மீது ஹுதி பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.  இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.  பலர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

ஏமன் ராணுவ செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களும் பலியாகி உள்ளனர்.  இந்த தாக்குதலுக்காக ஹுதி கிளர்ச்சியாளர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என கூறினார்.

எனினும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஹுதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக பொறுப்பேதும் ஏற்கவில்லை.

பகிர்ந்துகொள்ள