மட்டக்களப்பில் இலக்கு வைக்கப்படும் ஊடகவியலாளர்கள்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்?

You are currently viewing மட்டக்களப்பில் இலக்கு வைக்கப்படும் ஊடகவியலாளர்கள்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் உரிமை போராட்டம் குறித்தும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் காணி அபகரிப்பு ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிகார துஸ்பிரயோகம், இஸ்லாமிய தீவிரவாதம் ஒட்டுக் குழுக்கள் அட்டகாசம் குறித்து கடந்த காலங்களில் செய்திகள், கட்டுரைகள் எழுதி வந்த ஊடகவியலாளர்களை இலக்குவைத்தும், ஊடக சுதந்திரம் மற்றும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், காணாமல் போன ஊடகவியலாளர்களுக்காகக ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்களை நடத்திய ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து சில குழுக்கள் அச்சுறுத்தும் செயற்பாடுகளில் இறங்கி உள்ளனர்.

தமிழர்களின் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் மக்களின் உரிமை போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடக சங்கங்களை இலக்கு வைத்து அவர்களை முடக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளது.

கடந்த காலங்களில் மறைமுகமாக செயற்பட்டு வந்த இந்த குழுக்கள் தற்போது நேரடியாக களத்தில் இறங்கி செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பில் உள்ள குறிப்பிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்த 2016 ம் ஆண்டில் இருந்தே பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்துள்ளது. சில ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக பொலீஸ் விசாரணை மற்றும் புலனாய்வு துறையின் விசாரணைகள் அடிக்கடி நடத்தப்பட்டன.

அவர்களுக்கு எதிராக பயங்கரவாத பிரிவு மற்றும் சில புலனாய்வு அதிகாரிகள் ஊடாக பல பொய்யான தகவல்களை உள்ளடக்கிய கோவைகள் பல தடவைகள் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த 2018 ஆண்டு கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சிலர் புலனாய்வு துறை அதிகாரிகளால் பின்தொடரப்பட்டதுடன் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களின் விபரங்களை சில புலனாய்வு அதிகாரிகள் மறைமுகமாகவும் சில அரச அதிகாரிகள் ஊடாகவும்  திரட்டி வந்தனர். அத்துடன் சில ஊடகவியலாளர்கள் புலிகளுடன் தொடர்பை வைத்துள்ளார்கள் என்று கூறி அவர்களது வங்கி கணக்கு உட்பட வாழ்வாதாரம் வரை அலசி ஆராய்ந்து கொழும்பிற்கு தகவல்களை அனுப்பி இருந்தனர்.

இதைவிட கடந்த ஒரு வருட காலமாக சில ஊடகவியலாளர்கள் மீது பொலீஸ் விசாரணை, இரவு நேரங்களில் பொலீசார் வீடுகளுக்கு சென்று கைது செய்ய முயற்சித்தமை, கிராம சேவகரை வீட்டிற்கு அனுப்பி தகவல் திரட்டியது, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமை மற்றும் கொழுப்பு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் தகவல் திரட்டப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்தெறியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே அண்மையில் மட்டு ஊடக அமையத்திற்குள் சில ஊடகவியலாளர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்தது.

ஆனால் இது குறித்து பெரிதும் அலட்டிக்கொள்ளாத பாதுகாப்பு தரப்பு இதனை எடுத்த எடுப்பிலேயே வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்று சிலரூடாக பொய்ப் பரப்புரைகளை பரப்பி வந்துடன் அச்சுறுத்தல்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவே இல்லை.

சம்பவத்தை நீர்த்துப்போகச் செய்தல் அல்லது திசைதிருப்ப செய்தல் இதை தற்போது இலங்கையில்  ஒரு உத்தியாகவே சில குழுக்களை வைத்து கையாண்டு வருகின்றனர்.

பயங்கரவாத விசாரணைக்கு சென்று வந்தால் கூட அதனை வெளிநாடு போவதற்கு பயங்கரவாத விசாரணைக்கு சென்று வந்துள்ளார் என்று கூறும் அளவுக்கு நிலமை மோசமாக உள்ளது அதனை நம்பும் ஒரு கூட்டமும் உண்டு.

இதை விட இது போன்ற சம்பவங்களினால்  இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படும் என்பதற்காகவும் அவ்வாறு ஏற்படாது இருப்பதற்காக இது போன்ற சம்பவங்களை மூடி மறைத்து பூசி மேழுகும் தரப்புக்களும் உண்டு அவர்களுக்கு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லை.

இதனால் உண்மையாக பாதிக்கப்படும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

இது போன்ற காரணங்களால் ஊடகவியலாளர்கள் தங்களுக்கும் தங்களது குடும்பங்களுக்கும் ஏற்படும் உயிர் அச்சுறுத்தல்கள் குறித்தோ அல்லது ஏனைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தோ யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை.

குறிப்பாக உள்நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகள் ,புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் ஆகியோரிடம் இது குறித்து குறிப்பிடுவது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்ததை போன்று ஆகிவிடுகிறது.

பயங்கரவாத விசாரணைகளோ அல்லது வேறு ஏதும் அச்சுறுத்தல்களையோ எதிர்நோக்கும் ஊடகவியலாளர்கள் தங்களது குடும்பம் பிள்ளைகளை கருத்தில் கொண்டு செயற்படவேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.

யாரும் இவர்களுக்காக பேச முன்வர மாட்டார்கள் எனவே அவர் அவர் பாதுகாப்பு குறித்து அவர்களே கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக செயற்படும் குழு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை முடக்கவேண்டிய தேவை சில குழுக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த குழுக்களில் ஊழல் செய்த உயர் அரச அதிகாரிகள் முதல் காணி மோசடி செய்பவர்கள்,  முன்னாள் ஆயுத குழுக்கள், சில அரசியல் வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இயங்கும் சில அர புலனாய்வாளர்கள், சில வெளிநாட்டு உளவு முகவர்கள் என பலரும் உள்ளனர்.

இவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளை அச்சுறுத்தி முடக்கி அவர்களை ஊடக செயற்பாடுகளில் இருந்து  இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

அதற்காக பல் வேறு வழிகளில் முயன்று வருகின்றனர். கடந்த காலங்களில் மறைமுகமாக செயற்பட்டு வந்த இந்த நபர்கள் தற்போது நேரடியாக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

எதிர்காலத்தில் குறித்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக பல்வேறு விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான பல போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

சில ஊடகவியலாளர்கள் மீது பல விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் ஊடாக   அச்சுறுத்தியும் அதனால் குறித்த ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை முடக்க முடியவில்லை என்பதற்காக தற்போது மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வீசி குடும்ப அங்கத்தவர்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தி குடும்ப உறுப்பினர்கள் ஊடாக குறித்த ஊடகவியலாளர்களை முடக்கும் வகையில் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தி உள்ளனர்.

எனவே எதிர்காலத்தில் மட்டக்களப்பில் உள்ள சில ஊடகவியலாளர்களுக்கு எதிராக எதுவும் நடக்க கூடும் அதற்காக சில குழுக்கள் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

அவர் குறித்த முழுமையான விபரங்களை எதிர்காலத்தில் வெளியிட உள்ளதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள