மட்டக்களப்பு – சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஐந்து உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் அவரது குடும்பத்தினரும் அவயங்களைத் தானம் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வயல் வேலை முடித்து கிரான் பகுதியிலிருந்து சித்தாண்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்திரசேன ரேனுஜன் (வயது 29) படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (21.04.2023) இடம்பெற்ற விபத்தின் போது படுகாயடைந்த அவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததையடுத்து வைத்தியர்களின் ஆலோசனையுடன் அவரது உடலுறுப்புக்களை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
அதனடிப்படையில் மூளைச்சாவடைந்த ரேனுஜனின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இதயம் ஆகிய அவயங்கள் தேவையுடையோருக்கு பொருத்தும் வகையில் தானம் செய்யப்பட்டதாக ரேனுஜனின் சகோதரி இந்திரசேன கிரிஷாந்தினி தெரிவித்துள்ளார்.
தமது சகோதரனை இழந்தது ஆறாத் துயரமாக இருந்த போதிலும் தமது சகோதரனின் உடல் உறுப்புக்கள் 5 பேருக்கு வாழ்வளிக்கும் என்பதில் தமது சகோதரன் சாகாவரம் பெற்றுள்ளதாக நினைத்து தமது குடும்பத்தினர் பெருமையடைவதாக கிரிஷாந்தினி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுபோன்று உடலுறுப்புக்களைத் தானம் செய்ய தாமும் தமது குடும்பத்தவர்களும் சித்தமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எப்போதும் பொது நலனில் அக்கறை கொண்டுள்ள கிரிஷாந்தினி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இரத்த தானம் செய்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரேனுஜனின் உடல் அதிகளவானோரின் பங்கேற்புடன் சனிக்கிழமை (22.04.2023) சித்தாண்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விபத்தை ஏற்படுத்திய மற்றைய மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.