மட்டக்களப்பு நகரில் ஆண் ஒருவர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட சம்பவத்தில் அவரை பொல்லால் தாக்கிய இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (13) கைது செய்துள்ளதாக மட்டு சிறீலங்கா தலைமையக காவற்துறையினர் தெரிவித்தனர்.
முனைத்தீவு சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய வல்லிபுரம் அன்பழகன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த 11ம் திகதி மட்டுநகர் லொயிஸ் அவனியூர் வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் வீதி ஓரத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து 12 ம் திகதி குறித்த சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டிய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு சிறீலங்கா பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, சிசிரிவி கெமரா ஒன்றினை சோதனையிட்டபோது அதில் உயிரிழந்தவரை இருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்து இரு தடவைகள் பொல்லால் தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து 22, 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.