மட்டக்களப்பு, கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்தபடி மார்பில் வைத்து உறங்கிய 19 வயது இளைஞன் ஒருவர், தொலைபேசி அதிக வெப்பமடைந்து வெடித்ததில் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை (27) மாலை வீட்டில் உறங்கச் சென்ற இளைஞன், தொலைபேசியை மின்சாரத்தில் இணைத்து மார்பில் வைத்து உறங்கியதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொலைபேசி வெடித்ததைத் தொடர்ந்து படுகாயமடைந்த அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா சிறீலங்கா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






