மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசியபாடசாலையில் தரம் நான்கில் கல்வி பயிலும் ஒன்பது வயது மாணவி செல்வி விஹாஷிகா சாந்தரூபன் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.
சின்னஞ்சிறு கதைகள் என்னும் நூலையே அந்த மாணவி எழுதி வெளியிட்டிருந்தார்.
இந்நூலின் கதைகளுக்கான வண்ண ஓவியங்கள் மட்டக்களப்பு புனித சிசிலிய பெண்கள் தேசிய பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவி செல்வி க்ஷயனா ரவிக்குமார என்ற மாணவியால் வரையப்பட்டதும் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பம்சமாகும்.
இவ்விரு மாணவர்களினதும் படைப்பில் வந்த இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியிட்டிருந்தது.
இப்புத்தகத்திற்கான வெளியீட்டுவிழா டிசம்பர் மாதம் 18 ஆந் திகதி (18-12-2022) மட்டக்களப்பு ஒலிபன்ற் மண்டபத்தில் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறைத் தலைவர் திரு.கு.ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்வெளியீட்டு விழாவில் முதனிலை அதிதிகளாக கிழக்குப் பல்கலைக் கழக ஆங்கிலப் பேராசிரியர் ஜீ. கென்னடி, கிழக்குப் பல்கலைக் கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட பீடாதிபதி கலாநிதி.தி.சதானந்தன், வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை அதிபர் திருமதி.தவத்திருமகள் உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்விழாவின் சிறப்பதிதியாக வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் ஆசிரியர் திரு.ஜெ.ஜெயக்காந்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
இலங்கையின் தமிழ் சிறுவர் இலக்கியங்களில் ஒன்பது வயது சிறுமியால் சிறுவர்களுக்கு எழுதப்பட்ட முதல் நூல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.