மட்டக்களப்பு – வாகரை பனிச்சங்கேணி பிரதேசத்தில் 18 வயதுடைய யுவதி ஒருவர் மர்மாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த யுவதியின் சகோதரியின் கணவரைவியாழக்கிழமை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பனிச்சங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது யுவதியான யோகராசா திரிஷா என்பவரே கடந்த 29 ஆம் திகதி இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளர்.
குறித்த பிரதேசத்திலுள்ள யுவதியின் தாய், தந்தை பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் தாயார் வேலைவாய்ப்பை பெற்று வெளிநாடு சென்றுள்ள நிலையில், குறித்த யுவதி திருமணம் முடித்து வாழ்ந்து வரும் இரண்டாவது சகோதரியுடன் இருந்து கல்வி கற்று வருகின்றார்.
இந்த நிலையில் சம்பவதினமான கடந்த 28ஆம் திகதி மாலை 7 மணியளவில் யுவதியை படிக்குமாறு அவரது சகோதரி தெரிவித்துவிட்டு தனது கணவனுடன் அந்த பிரதேசத்திலுள்ள தனது; மூத்த அக்காவின் வீட்டிற்கு பட்டா ரக வாகனத்தில் கணவர் ஏற்றிக் கொண்டு சென்று விட்டுவிட்டு மனைவியிடம் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து வீட்டில் தனிமையில் இருந்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட யுவதி, தன்னையும் தனது மூத்த அக்கா வீட்டில் கொண்டு சென்று விடுமாறு தெரிவித்த நிலையில், 7.30 மணியளவில் அவரையும் அதே வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று சுமார் 5 நிமிடத்தில் மீண்டும் குறித்த யுவதியை சடலமாக வாகனத்தில் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு சடலமாக கொண்டுவந்த யுவதியின் ஆடைகளிலும் அவரது ஆடைகளிலும் இரத்த கறை இருப்பதை கண்டு ஆடைகளை கழற்றி வேறு ஆடைகளை அணிவித்து அறையிலுள்ள கட்டிலில் நித்திரையில் இருக்கும்படி சடலத்தை ஒழுங்கு படுத்திவிட்டு மின்விசிறியை இயங்கவைத்துவிட்டு இரத்தகறையுடன் கழற்றப்பட்ட தனதும் மற்றும் உயிரிழந்த யுவதியின் ஆடைகளையும் ஒழித்து வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி கெமராவின் வன்தட்டை (ஹார்ட்டிஸ்க்) கழற்றி அதனை ஒளித்துவைத்துவிட்டு இரவு 11 மணியளவில் மனைவியை கொண்டு சென்று விட்டுவிட்டுவந்த மனைவியின் சகோதரிவீட்டிற்கு சென்று மனைவியை அங்கிருந்து கூட்டிக் கொண்டு வீடு திரும்பிய நிலையில் சிறுமி நித்திரையில் இருப்பதாக மனைவியிடம் தெரிவித்து அவரை எழுப்பவேண்டாம் என தெரிவித்து விட்டு கணவன், மனைவியுடன் தமது அறையில் நித்திரைக்கு சென்றுள்ளார்.
இதன் பின்னார் அடுத்த நாள் 29ஆம் திகதி காலையில் யுவதி அறையில் இருந்து வெளிவராத நிலையில் அறைக்கு சென்று சிறுமியை எழுப்ப முற்பட்ட போது சிறுமியின் வாயில் நுரையும், இரத்தமும் வெளியேறியதை கண்டு உடனடியாக காவல்துறையினருக்கு அறிவித்தனர் என காவல்துறையினரின்; ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சடலத்தை பார்வையிட்ட காவல்துறையினர் நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்டவைத்திய அதிகாரி குறித்த யுவதியின் தலையிலும், முதுகுபகுதியிலும் தாக்குதல் இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை ஒன்றை காவல்துறையினருக்கு வழங்கியதையடுத்து குறித்த யுவதியின் 28 வயதுடைய சகோதரியின் கணவரை நேற்று கைது செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மறைத்து வைக்கப்பட்டிருந்த வன்தட்டை மீட்ட பொலிசார் அதனை சோதனையிட்டபோது அதில் முதலில் மனைவியை ஏற்றி செல்வதும், பின்னர் குறித்த யுவதியை ஏற்றிச் சென்று சுமார் 5 நிமிடத்தில் திரும்ப அவரை சடலமாக கொண்டு வருவதும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.