மணல் கொள்ளையில் சிறிலங்கா காவல்துறையின் இரட்டை வேடம்!

  • Post author:
You are currently viewing மணல் கொள்ளையில் சிறிலங்கா காவல்துறையின் இரட்டை வேடம்!

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் கையூட்டுக்களை பெற்று கொண்டு கட்டுப்பாடற்றவகையில் மணல் அகழ்வு இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் காவல்துறையினரின் தங்கள் செயற்பாட்டை மறைப்பதற்காக 30 பேர் கொண்ட சிறிலங்கா காவல்துறையினரை மணல் கொள்ளையை தடுக்க தனிப்படையாக அமைத்திருக்கிறார்கள்

வடமராட்சி கிழக்குப் பகுதிகளான குடத்தனை, பொற்பனை மற்றும் மணற்காடு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் பெருமளவான மணல் சட்டத்துக்குப் புறம்பாக அகழப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளுக்குள் கடல் நீர் உள்புகும் அபாயம் உள்ளது.

அந்தப் பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பான மணல் அகழ்விட்கு சிறிலங்கா காவல்துறையினரும் துணை போவதுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் மக்களால் தெரிவிக்கப்படும் அதேவேளை, மக்கள் களத்தில் இறங்கி மணல் கடத்தல்களைத் தடுத்து வருகின்றனர்.

நேற்று திங்கட்கிழமை அந்தப் பகுதிகளில் இடம்பெறும் மணல் கடத்தல்களைத் தடுக்கச் சென்றவர்கள் மீது மணல் கடத்தல் கும்பலால் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து கும்பலால் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்கள்
மற்றும் ஒரு ரிப்பர் வாகனத்தையும் காவல்துறையினர் மீட்டிருந்தனர்.

இந்த நிலையில் வடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்டு சிறப்பு காவல்துறை பிரிவு ஒன்றை நியமித்து தாங்கள் சட்ட ரீதியாக பணியாற்றவது போல் காட்டிக்கொள்ள ஶ்ரீலங்கா காவல்துறை முயல்கிறது.

பகிர்ந்துகொள்ள