மதுக்கடைகளை மீண்டும் திறப்பது கொரோனாவை விடக் கொடூரமானது!

You are currently viewing மதுக்கடைகளை மீண்டும் திறப்பது கொரோனாவை விடக் கொடூரமானது!

வருகிற ஏழாம் தேதி முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்கிற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நீண்ட நெடும் காலமாக மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டஙகள் எண்ணில் அடங்காதவை. அதிலும் போர்க்கோலம் பூண்டு ஊரூராக பெண்களே நடத்திய போராட்டத்தை எவராலும் மறக்க முடியாது. இந்த ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரை நம் தமிழ் மண்ணில் நடைபெற்ற எல்லா குற்றச் சம்பவங்களுக்கும் மூல காரணம் மதுக் கடைகள்தான். இங்கு ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது மூதாட்டிவரை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். பெரும்பாலும் இந்த குற்ற வழக்குகளில் ஈடுபடுகிறவர்கள் மது போதையில் இருந்ததாகவே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழத்தில் சத்தத்தோடு நடந்த யுத்தத்தில் விதவையாக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும். ஆனால் தமிழகத்தில் சத்தமில்லாமல் நடந்து வரும் மது யுத்தத்தால் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விதவையாக்கப்பட்டு தகப்பனில்லாத பிள்ளைகளோடு தவித்து வருகின்றனர். நமது தமிழீழ பெண்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாக இருந்தாலும், தாய்த்தமிழகத்து பெண்கள் மீது நடந்து கொண்டிருக்கிற தாக்குதலாக இருந்தாலும் இவை இரண்டுமே அந்தந்த மண்ணை ஆளும் அரசுகளாலேயே அரங்கேற்றப்பட்டு வருகிறது. அங்கு அழிப்பவர்களாவது எதிரிகள். இங்கு அழிப்பவர்களை நாம் என்னவென்று சொல்வது?.

மார்ச் இருபத்து நான்கு முதல் இதுவரை தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்திருப்பதற்கு காரணம் மதுக் கடைகள் மூடப்பட்டிருப்பதுதான். வருமானத்தை பெருக்குவதற்காக மதுக்கடைகளை திறப்பதாக கூறுவது நேர்மையற்ற கூற்று. பொருளாதார வல்லுனர்களை கூட்டி வருமானத்தை பெருக்குவதற்கான மாற்று முயற்சியில் அரசு இறங்க வேண்டுமே தவிர கொலை, கொள்ளை, சாலை விபத்து என சமூகத்தின் அத்தனை சீரழிவுகளுக்கும் வித்திடும் இந்த சனியனுக்கு சமாதி கட்ட வேண்டிய அற்புதமான நேரம் இது. தவிரவும் இருக்கின்றவர்களை எல்லாம் கொன்றொழித்து விட்டு அதில் வருகின்ற வருமானத்தை வைத்து அரசு அப்படி என்ன நல்லது செய்துவிட முடியும்?.

கொரோனா பாதிப்பு கூடுகிறது என்பதற்காக உயிர்காக்கும் உணவுக்கான காய்கறி சந்தைகளையே இடம் மாற்றுகிறோம். ஆனால் நித்தம் நித்தம் உயிர் குடிக்கிற டாஸ்மாக் கடைகளை இரக்கமின்றி திறக்கிறோமே இது சரியா?.
ஊரடங்கின்போது கில்லி, கிரிக்கெட்டு விளையாடுபவர்களைக்கூட ட்ரோன் (கேமரா)கொண்டு துரத்துகிறோம். ஆனால் அதே கேமரா மாநில எல்லை தாண்டி மது வாங்குவதற்காக கூடும் தமிழர்கள் கூட்டத்தை விரட்டுவதுமில்லை படம் பிடிப்பதுமில்லையே ஏன்?.

போதிய நிவாரணம் இல்லாமல் அடித்தட்டு, அன்றாடம் காய்ச்சிகளையும் தினக்கூலி தொழிலாளிகளையும் ஏற்கனவே கொரோனா கோவணத்தையும் உருவியெடுத்து விட்ட நிலையில் மீண்டும் மதுவின் மூலம் மிச்ச சொச்சமிருக்கும் சில்லறைகளையும் அபகரிக்க நினைப்பது எத்தகைய அறம்?.

ஊரடங்கு தொடங்கிய நாள்முதல் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடும்பங்களில் பெருகிவிட்டன என்றுகூறி, அதற்கென தனி எண்ணை உருவாக்கி பாதிக்கப்படும் பெண்கள் அழையுங்கள் என அழைப்பு விடுத்த அரசு, மதுக்கடை திறக்கப்படுவதால் அதே பெண்கள் வன்முறையில் சிக்கி சின்னா பின்னமாவார்கள் என்பதை ஏன் உணர மறுக்கிறது?

தாலிக்கு தங்கம் கொடுப்பது முக்கியமல்ல. அந்த தாலிகளை எங்கள் தாய்மார்களின் கழுத்தில் நிலைக்க செய்வதுதான் மிக மிக முக்கியமானது என்பதை எப்போது உள்வாங்கி தாயுள்ளத்தோடு முடிவெடுக்கப் போகிறோம்?.

மதுவினால் இனியும் தமிழக மக்கள் ஒரு தரித்திர வாழ்க்கைக்குள் மூழ்காமல் நிரந்தரமாக மதுவினை ஒழித்த மகத்தான முதல்வர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் என்று தமிழக சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் வகையில் நிரந்தர மதுவிலக்கினை கொண்டு வருமாறு உயிர்வலியோடு கோரிக்கை வைக்கிறேன். தமிழக அரசும் மரியாதைகுரிய முதல்வர் அவர்களும் நல்லதொரு முடிவினை விரைவில் அறிவிப்பார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
05.05.2020

மதுக்கடைகளை மீண்டும் திறப்பது கொரோனாவை விடக் கொடூரமானது! 1
மதுக்கடைகளை மீண்டும் திறப்பது கொரோனாவை விடக் கொடூரமானது! 2
பகிர்ந்துகொள்ள