தாய்மார்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய மனிதத்தைன்மை இல்லாதவரின் வாழ்க்கை வரலாற்றை நடிக்கும் முயற்சியை நடிகர் விஜய்சேதுபதி கைவிடவேண்டும்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உருக்கமான கோரிக்கையினை யாழ்.ஊடக அமையத்தில் வைத்து விடுத்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் 800 என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு நடிகர் விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளமை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறித்த திரைப்படத்தில் இருந்து அவர் விலக வேண்டும் என அவரிடம் பகிரங்க வேண்டுகோளையும் விடுத்துள்ளனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் 8 மாவட்ட பிரதிநிதிகளும் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களை சந்தித்து மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-
தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள 800 திரைப்படம் தொடர்பான விடயம் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்த விடயம் குறித்து எமது உறவுகள் சார்பாக எமது அதிருப்தியை வெளியிடுகிறோம். அத்துடன் தென்னிந்திய திரைப்படத் துறையினருக்கும் குறிப்பாக விஜய்சேதுபதி அவர்களிடமும் ஊடகங்கள் வாயிலாக ஒரு பகிரங்க வேண்டுகோளையும் விடுக்கிறோம்.
நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் குறித்த படத்தில் ஒப்பந்தமாகும் போது முரளிதரனை பற்றிய முழு தகவல்களும் தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் தற்போது தமிழ் மக்களிடம் இருந்தும் சமூக வலைத்தளங்களிலும் வருகின்ற விமர்சனங்களை அவர் கவனத்தில் கொள்ளவேண்டும்.
முரளிதரன் என்பவர் சிறந்த விளையாட்டு வீரராக இருக்கலாம் ஆனால் அவர் ஓட்டுமொத்த தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தியுள்ளார்.
அவர் ஒரு தமிழனாக இருந்துகொண்டு தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட நாள் தனக்கு மிகவும் சந்தோசமான நாளென பகிரங்கமாக கூறியவர்.
பெயரை மாத்திரம் தமிழில் வைத்துக்கொண்டு எம் உறவுகளை கொன்றொழித்தவர்களுக்கு விசுவாசத்தை காட்டுபவர் அவர்.
எமக்கு ஏதிரிகளாக இருப்பவர்கள் கூட அன்றைய நாள் இனிய நாள் என கூற மாட்டார்கள். சிங்கள மக்களே எமது கஸ்டங்களை கேட்டு கண்ணீர் வடித்துள்ளார்கள்.
ஆனால் தமிழனாக இருந்துகொண்டு,2009 ஆம் ஆண்டு தனக்கு இனிமையான நாள் என கூச்சம் இல்லாமல் கூறியுள்ளார். மனிதத்தன்மை இல்லாதவர் என்பதை நிரூபித்துள்ளார்.
அதனை விட எம் போராட்டத்தையும் எம்மீதும் பொய்யான விமர்சனம் ஒன்றையும் அவர் கடந்த காலத்தில் முன்வைத்துள்ளார்.
எனவே அவர் தொடர்பான படம் வரக்கூடாது என்பதில் உறுதியாக நாம் உள்ளோம்.
டேவிட் கமருன் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த போது எமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கூறுவதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் யாழில் திரண்டிருந்தார்கள் குறித்த விடயம் தொர்பாக சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் முரளிதரனிடம் கருத்துக் கேட்டதற்கு மனதில் சிறிதளவேனும் ஈவிரக்கம் இல்லாமல் மனித தன்மையை மறந்து 20, 30 அம்மாமார் வந்து போராடினால் அது உண்மை ஆகாது என இரக்கமே இல்லாமல் கூறியுள்ளார்.
உறவுகளின் பாசத்தையும் உணர்வுகளையும் பற்றி தெரியாத அரக்கர் குணம் படைத்தவர்கள் தான் இதை கூற முடியும்.
ஒரு விடயம் பற்றி தெரியாது விட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.
எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தியதை நாம் அன்றும் வன்மையாக கண்டித்தோம் இன்றும் கண்டிக்கிறோம்.
கிரிக்கெட் விளையாடில் 11 பேர் விளையாடுகிறர்கள்.
வென்றுவிட்டால் இலங்கை வென்றதாக கூறுவர்கள்.அதற்காக இலங்கையில் உள்ள அனைவரையும் கூட்டிச்சென்று விளையாட முடியுமா, அதே போல் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்க அதை தெரியப்படுத்த இலட்சக்கணக்கானவர்களின் சார்பாக பிரதிநிதிகளாக பல பெற்றோர் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டோம்.
அதை அவர் கொச்சைப்படுத்தினார். எமது போராட்டத்தை கொச்சைப்படுத்த முரளிதரனுக்கு தகுதி இல்லை.
இவ்வாறாக எமது உணர்வுகளை சாகடித்த ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை தமிழர்கள் விரும்பும் பிரபல்யமான ஒரு தமிழ் திரைப்பட நடிகர் நடிக்கக் கூடாது என்பது எமது வேண்டுகோள்.
அத்துடன் தமிழகத்தில் உள்ள நடிகர் சங்கங்கள், இயக்குநர் சங்கங்கள்,திரைப்பட ஒப்பந்தகாரர்கள் அனைவரும் இணைந்து,இந்த படத்தை வேறு யாரும் தயாரிக்கவும் இடமளிக்க கூடாது என்பதுடன் அந்த முயற்சிகளுக்கு அழுத்தத்தையும் கொடுக்கவேண்டும்.
எமது உறவுகளை தேடி நாம் இன்றும் போராடிக்கொண்டு தான் இருக்கிறோம் எமக்கு நீதிவேண்டி தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் எங்களில்77 பேரை இதுவரை இழந்தும் உள்ளோம்.
எம்மை உங்களது அன்னையர்கள் போல் நினைத்து எமது போராட்டத்தை கொச்சைப்படுத்திய முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை நடிக்கும் முயற்சியை விஜய் சேதுபதி அவர்கள் கைவிடவேண்டும்.
எமது அவலக்குரலை கவனத்தில் எடுத்து எமது பிள்ளையாக உங்களிடம் உரிமையுடன் கேட்கிறோம்.
எதிரில் இருப்பது குழி எனத் தெரிந்தும் அதற்குள் கால் வைக்க முயற்சிக்க வேண்டாம் இந்தப் பட ஒப்பந்தத்தில் இருந்து உடனடியாக விலகி எமது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் உங்கள் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
தாய்மார்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய மனிதத்தைன்மை இல்லாதவரின் வாழ்க்கை வரலாற்றை நடிக்கும் முயற்சியை நடிகர் விஜய்சேதுபதி கைவிடவேண்டும்.