நாட்டின் இடம்பெற்ற பல்வேறு உள்நாட்டு மோதல்களில் இருந்து “காணாமல் போனவர்கள்” என்று அழைக்கப்படுபவர்களின் எச்சங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பில் விசாரிக்குமாறு ஐந்து சிவில் சமூக அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளன.
இந்த சமூக அமைப்புக்கள் கடந்த ஜூன் 22 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் ”மனித புதைகுழிகளை தோண்டி எடுக்கும் போது சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் உறுதியளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, தொடர்ச்சியாக வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், காணாமல் போனவர்களின் குழப்பமான பிரச்சினைக்கு முறையான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை.
மேலும், நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் (OMP) ஏமாற்றத்தை அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்று தசாப்தங்கள் மற்றும் இருபது மீட்பு முயற்சிகளின் பின்னர், ஒரு சில சடலங்களே அடையாளம் காணப்பட்டு குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .
இந்நிலையில், மனித புதைகுழிகள் தொடர்பான கடந்தகால விசாரணைகள் பற்றிய விரிவான அறிக்கையை ஐந்து சிவில் சமூக அமைப்புக்கள் வெளியிட்டிருந்தன.
இந்த அறிக்கையின்படி, மனித புதைகுழி விவகாரம் விசாரணைகளில் அரசின் தலையீட்டை தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சத்தியத்திற்காக எவ்வளவு காலம் கடின உழைப்பைச் செலவிட்டார்கள் என்பதை விளக்கும் 30 நிமிட ஆவணப்படமான “இன் ப்ளைன் சைட்” திரைப்படம் இலங்கையின் மனித கல்லறைகளுக்குப் பின்னால் உள்ள உண்மை தேடுதலாக வெளியிடப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் உட்பட பல கதைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இலங்கையில் காணாமல் போனவர்கள் மற்றும் மனித புதைகுழிகளுக்கு இடையிலான உறவை இந்த ஆவணப்படம் ஆராய்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாத்தளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பாரிய மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டு அறிக்கைக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.
2013 இல் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்கள் 1980 களின் பிற்பகுதியில் காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் என்று நம்பப்படுகிறது.
1989ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பாளராக இருந்தபோது, மாத்தளையில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் காணாமலாக்கப்பட்டனர்.
இதற்கமைய கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேக நபராக பெயரிடப்பட்டார்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா நிபுணர்கள் குழு, “கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை செய்து பொறுப்புக்கூறுமாறு இந்த ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி இருந்தது.
அதற்கமைய, குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டும், அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று ஐ.நா தெரிவித்திருந்தது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் யாஸ்மின் சூகா, குற்றங்களை ஆவணப்படுத்துதல், ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாப்பது முதல் படி மட்டுமே. ஆனால், முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் இன்னும் நம் உறவுகளை கண்டுபிடித்து வருகிறோம் என்று ஒரு அறிக்கையில் மனித புதைக்குழி விவாகாரத்தை மேற்கோள் காட்டியிருந்தார்.
பாரிய மனித புதைகுழிகள் தெற்கில் உள்ளதா, வடக்கில் உள்ளதா அல்லது கிழக்கில் உள்ளதா என்பது தொடர்பான நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் எவ்வாறு ஸ்தம்பிதமடைந்துள்ளன என்பதை சிவில் சமூகங்களின் அறிக்கையின் மூலம் ஆராயப்படுகிறது.
அண்மையில் இலங்கையின் நீதிபதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் திடீர் இடமாற்றம், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் காவல்துறை தாமதம், குடும்ப வழக்கறிஞ்சர்கள் தளங்களில் இருந்து தடை, உயிருள்ள சாட்சிகளைக் கண்டறிய எந்த முயற்சியும் இல்லாமை , விசாரணைக்கு முந்தைய தரவு சேகரிக்கப்படாமை, அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வழக்கை கைவிட்டமை, சில வழக்குகளில் அரிதாகவே தண்டனை வழங்கப்பட்டமை, பின்னர் மன்னிக்கப்பட்டமை என பல்வேறான முறைப்பாடுகள் குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியிலேயே மாத்தளை புதைகுழி விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்திய நீதவான் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால், இலங்கை இராணுவத்தினதும் அவர்களின் அரசியல் தலைவர்களினதும் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன என்பது உறுதியாகிறது.
2018 ஆம் ஆண்டில், மன்னாரில் இருந்து 318 சடலங்கள் (28 குழந்தைகள் உட்பட) மீட்கப்பட்டன. தோண்டப்பட்ட சடலங்களில் கால்களை பிணைக்கப் பயன்படுத்தப்படும் உலோகப் பிணைப்புகள் இருந்ததாகவும், மாத்தளையில் மீட்கப்பட்ட சில எலும்புகளில் தோட்டாக்கள் இருந்ததாகவும் மற்றவை அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.