மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது. அங்கு நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் 14ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே அனைவரும் பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 23)ஒரே நாளில் புதிதாக 212 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்போது 1,518ஆக உள்ளது என மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மலேசியாவில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.இதற்கு முன்பு கடந்த 15ஆம் தேதி 190 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே நேற்றும் இன்றுமாக நான்கு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 70 வயது ஆடவர்கள் இருவர், 49 வயது மலேசிய குடிமகன் மற்றும் 51 வயது மலேசியப் பெண்மணியும் அடங்குவர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இதுவரை 159 பேர் சிகிச்சைக்குப் பின்பு முழுமையாக குணமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 57 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு என 33 மில்லியன் தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள் (personal protective equipment – PPE) வாங்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
இக்கருவிகள் அனைத்தும் இவ்வாரம் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு தரப்பினர் மூலம் இந்தக் கருவிகள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார்.