மாசடைந்த காற்றை சுவாசித்ததால் 9 வயது சிறுமியொருவர், இங்கிலாந்து லண்டன் நகரில் மரணமாகியதாகவும், உலகளவில் இவரே, “மாசடைந்த” காற்றை சுவாசித்ததால் மரணமான முதல் மனிதரெனவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டன் நகரின், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றின் அருகே வசித்து வந்த “Ella Kissi-Debrah” என்ற 9 வயது சிறுமி, மூச்சுத்திணறல்கள் காரணமாக, மூன்று வருட காலப்பகுதிக்குள் சுமார் 30 தடவைகளுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
எனினும் குறித்த இந்த சிறுமி 2013 ஆம் ஆண்டில் மரணத்தை தழுவிக்கொண்டாள்!
சிறுமியின் மரணத்துக்கு, திடீரென ஏற்பட்ட சுவாச செயலிலப்பே காரணமென 2014 ஆம் ஆண்டில் காரணம் சொல்லப்பட்டிருந்ததாகவும், எனினும், ஆறு வருடங்களுக்குப்பின்னதாக இப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சிறுமியின் மரணத்துக்கு வேறு புறநிலைகளும் காரணமாக இருந்திருக்கிறதென இறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான மரணங்களை விசாரிக்கும் பிரித்தானிய நீதியகமான “Coroner’s Court”, சுமார் இருவார காலங்களாக விசாரித்ததில், மாசடைந்த காற்றை சுவாசித்ததும், சிறுமியின் மரணத்துக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதென இறுதி செய்துள்ளது.
சிறுமியின் மரணத்துக்கான காரணங்களை ஆராய்ந்து நீதியகத்தில் அறிக்கை சமர்ப்பித்த தடயவியல் நிபுணர் “Philip Barlow”, சிறுமி மரணமானதுக்கான காரணங்களை பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.
- திடீரென ஏற்பட்ட சுவாச செயலிழப்பு!
- மிக ஆபத்தான மூச்சுத்திணறல்!
- மாசடைந்த சுவாசக்காற்றை அதிகளவில் சுவாசித்தமை!
சுவாசக்காற்று மாசடைந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமான உலகின் முதல் மனிதராக மேற்படி சிறுமி பதிவு செய்யப்பட்டுள்ளதாக “CNN” செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.