யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவியை சட்டத்தரணி வி.மணிவண்ணன் இழந்துவிட்டாரென அறிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகர் இ.கி.அமல்ராஜ், இது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளாரென அக்கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒக்டோபர் 13ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக அறிவித்துள்ளார். அதனையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பில், யாழ்ப்பாணம் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகர் கடிதம் மூலம் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு அறிவித்துள்ளார்.
“அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கின்றது.
“அதனடிப்படையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிபாரிசின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விஸ்வலிங்கம் மணிவண்ணன், எமது கட்சியின் நியமன உறுப்பினராக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டார்.
“எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுக்காற்று நடவடிக்கையால் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அந்தக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
“அதனால் அவரை, யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்புறுப்புரிமையில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.