
ஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் 15.04.2006 அன்று மரணமடைந்தார். அவரின் 14 ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஒவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன்.
தமிழன் சிந்திய இரத்தம்,கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட “வலியும் பழியும்” என்ற நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளின் குரலில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செலவிட்டார். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காகவும், அதன் பின்னர் கரும்புலி காவியம் நூல் உருவாக்கம், கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் மதிப்பளிக்கப்பட்டார்.

கவிஞர் நாவண்ணனின் இலக்கியப்பணி நீண்டது. உண்மையில் அவரைக் கவிஞர் என்றுமட்டும் சொல்வதிலும்பார்க்க, பல்துறைக் கலைஞரென்றே சொல்லவேண்டும். அவ்வளவுக்கு பலதுறைகளில் ஈடுபாட்டுடன் உழைத்த மனிதர். 1985 ஆம் ஆண்டு சிங்கள அரசபடையாற் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வங்காலைக் குருவானவர் அருட்திரு மேரிபஸ்ரியன் அடிகளார் பற்றிய நூலான “தீபங்கள் எரிகின்றன” என்ற நூலின் மூலம்தான் எனக்கு நாவண்ணன் அறிமுகமானார்.

பின் “புலிகளின் குரல்” வானொலியிற் பணியாற்றிய காலத்தில் மிக வீச்சுடன் செயலாற்றினார். மிக அருமையான தாயகப்பாடல்களை எழுதியுள்ளார்.
“தமிழன் சிந்திய இரத்தம்” என்ற தொடர் ஈழத்தவர்களின் அவலங்களை ஆவணப்படுத்திய முக்கிய நிகழ்ச்சி. இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றில் முக்கியமானது இத்தொகுப்புத்தானென்பேன். தனியே ஓர் இனப்படுகொலையையோ அல்லது ஒட்டுமொத்தமானவற்றையோ திரட்டிப் புள்ளிவிவரங்களோடு தொகுப்பட்டவற்றைத் தாண்டி, தனிமனிதர்களின் அவலங்களை அவர்களின் குரலிலேயே ஆவணப்படுத்தியதும், போர் உக்கிரமடைந்தபின்னும் தனிமனிதர்கள் மேல் நடத்தப்பட்ட கொடுமைகளின் சாட்சியத்தைப் பேணியதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.

லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயம் அவர்களிடம் பரிசு வாங்கும் கலைஞர் நாவண்ணன்.
“மட்டக்களப்பில் குடும்பத்தோடு சேர்த்து வீடு கொழுத்தப்பட்டபோது சிறுவயதில் தப்பிய ஒருவன், தன் குடும்பம் முழுவதுமே அதில் கொல்லப்பட்டதாக நினைத்திருந்தவன், மணலாற்றுச்சண்டையில் தன் சகோதரியைப் போராளியாகவே சந்தித்த சம்பவங்கள் (இதன்மூலம் தமிழ்ச்சினிமாவின் சில சம்பவங்கள் சாத்தியமுள்ளவையென்று நம்பத்தலைப்பட்டவன் நான்) உட்பட ஏராளமானவற்றை ஆவணப்படுத்தியவர் நாவண்ணன். உண்மையில் கிழக்கு மக்களின் அவலங்களும் போராட்டப் பங்களிப்பும் வடக்கோடு ஒரேதளத்தில் வைத்துப் பார்க்க முடியாதென்ற தெளிவை எனக்குமட்டுமன்றி நிறையப் பேருக்குத் தந்தது அந்நிகழ்ச்சி. எல்லைப்புறத் தமிழர்கள்மேல் நடத்தப்பட்ட வன்முறைகளும் இடங்களைப் பறிகொடுத்து அவர்கள் வெளியேறியதும் பலர் வெளியேறாமலே வீம்பாக இருந்து மாண்டதும் உட்பட எல்லைப்புறத் தமிழர்களின் சிலபாடுகளையாவது வெளிக்கொணர்ந்த தொகுப்பு அது.
ஏற்கனவே ‘தமிழன் சிந்திய இரத்தம்’ என்ற பெயரில் கவிஞர் நாவண்ணன் புத்தகமொன்று வெளியிட்டிருந்தார். அதில் ஆயுதப்போராட்டம் வீரியமடைய முந்திய காலப்படுகொலைகளை ஆவணப்படுத்தியிருந்தார். பின் அதே பெயரில் ஒலிவடிவில் அவர் தொகுத்த தொகுப்புத்தான் புலிகளின் குரல் வானொலி நிகழ்ச்சி. இதுவரை அது புத்தகமாக வரவில்லையென்று நினைக்கிறேன். விரைவில் வரவேண்டும். அனாலும் பாதிக்கப்பட்டவர்களின் நேரடிக்குரற் சாடசியங்களடங்கிய ஒலிப்பேழையும் வெளியிடப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.

அதைவிட 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மடுத்தேவாலயப் படுகொலை பற்றியும் அவரொரு சிறந்த தொகுப்பைச் செய்திருந்தார். கையெழுத்துப்பிரதியாக இரண்டொரு பக்கங்கள் வாசித்தேன். அது இன்றுவரை வெளிவரவில்லை. வெளிவராததற்கு இருக்கும் காரணம் நியாயமானது, என்றாலும் ஒருநாள் வெளியிடப்படுவதற்காகவேனும் அவர் தொகுத்துவைத்த அப்புத்தகத்துக்காக அவருக்கு நன்றி.
கரும்புலி காவியம் என்ற பெரும்பணியைச் செய்ய முடிவெடுத்தபின் அதற்கான தரவுகளுக்காக வன்னியின் மூலைமுடுக்கெங்கும் புழுதி குடித்து அலைந்த கவிஞரின் பாடுகளை நன்கு அறிவேன். இவையெல்லாமே காசு கிடைக்காத தொழில்கள். அவரது அலைச்சலுக்கோ அந்தக் காவியத்துக்கோ ஊதியமேதுமில்லை. வரலாற்றை ஆவணப்படுத்தும் திருப்தியைத் தவிர வேறொன்றுமில்லை.
நாவண்ணனின் பாடல்கள் எனக்கு மிகப்பிடித்தமானவை. வவுனிக்குளத் தேவாலயப் படுகொலையை நினைந்து உடனடியாகவே அவர் இயற்றி, திருமலைச் சந்திரன் பாடிய பாடலைக் கேட்டு உருகாதவர் யாருமிருக்க முடியுமா?
“கன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும். -எம் சன்னங்கள் வென்றிட உம்தயை தாரும்.”
கவிஞர் நாவண்ணனின் “அக்கினிக் கரங்கள்” என்ற நூல் 01.03.2006 அன்று கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இதுதான் அவரின் கடைசி நூல்.
சூசைநாயகம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் நாவண்ணனுக்கு ஆறு பிள்ளைகள். ஐந்துபேர் பெண்கள். அவரின் ஒரேமகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்) களத்திலே வீரச்சாவடைந்துவிட்டார்.

“ஊர் கொடுத்தார் புலவருக்கு
உவந்தளித்தார் மிடி தீர
தேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,
தெரு வெல்லாம் பவனி வர;
கார் நிறத்துக் கரி கொடுத்தார்;
காற்று விசைப் பரி கொடுத்தார்”
என்று வியந்து தொடங்குகிறது அவரது “கரும்புலி காவியம்”.
“காவியமாய் புதுப் புறம்பாடி” எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து – சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்”
என்ற அவரது கனவு முழுதாக நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.
கவிஞர் நாவண்ணன் அவர்களின் கவிதையொன்று.
இவனா என் பிள்ளை!
அம்புலியைக் காட்டி ஆவென்ன வைத்து
“அச்சாப் பிள்ளை “யென “ஆய்தந்த பிள்ளை”
கம்பால் அடித்து கண்டித்து பின்னர்
கண்ர் துடைத்து அணைத்திட்ட பிள்ளை;
“வம்புக்குப் போகாதே வலுச்சண்டை செய்யாதே
வாய்காட்டாதே” யென்று வளர்த்திட்ட பிள்ளை;
பெம்பகைவர் படைஅழிக்கும் வீரனாம் எனக்கேட்டு
வியக்கின்றேன் இன்று, இவனா என் பிள்ளை!
இருட்டுக்கு அஞ்சியவன் இரவானால் தனியாக
இருப்பதற்கு துணைகேட்ட பயங்கொள்ளிப் பிள்ளை
விரட்டிக் கலைத்தாலும் விட்டகலாம் தாய்சேலை
வீம்போடு அவளோடு அலைகின்ற பிள்ளை;
பரட்டைத் தலைவான் படிப்புக்கு ஒளித்திடுவான்
பசியின்றி விளையாடித் திரிகின்ற பிள்ளை;
முரட்டுத் துவக்கோடு ‘சென்றி’யிலே நின்று
முழிக்கின்றான் இன்று இவனா என்பிள்ளை!
விதம்விதமாய் சமைத்து விருப்பு சுவையறிந்து
வேலைக்குக் கொடுத்தாலும் ” இது என்ன
இதம்இல்லை வேண்டாம் எனக்கு” என்றுகூறி
எடுத்தெறிந் தெழுகின்ற என்பிள்ளை.
பதம்பாகம் இல்லாது பசிக்கே உணவென்று
படையலாய் அவித்த எதையேனும்
நிதம் உண்கின்றானாம் நிம்மதியாம் அவனுக்கு
நினைக்கின்றேன் இன்று, இவனா என்பிள்ளை!
நாய் குரைக்க ஓடிவந்து நடுங்கிப் பதறியவன்
நாலுபேர் முன்நிற்க துணிவில்லாக் கோழை
தாய்க்கும் எனக்கும் நடுவினிலே துயிலுவதே
தனக்குச் சுகம் என்று எண்ணியவன் இரவில்
பாய் நனைப்பான், எழப்பயந்து படுப்பான் எழுப்பாது;
பட்டாசு வெடிக்கே பலகாதம் ஓடுபவன்
தாய்நாடு காக்கும் தானையிலே முன்னணியில்
திகழ்கின்றான் இன்று இவனா என்பிள்ளை?
இப்படியாய் மற்றவர்கள் இகழ்ந்துரைக்கும் குணங்களுடன்
இளப்பமாய் வாழ்ந்திட்ட என்னுடைய பிள்ளை
தப்படிகள் இல்லாது தக்கபடிதான் வளர்த்த
தத்துவத்தை வியக்கின்றேன் இவனா என்பிள்ளை!
எப்படித்தான் இவனுக்குள் இதுவெல்லாம் தோன்றியதோ?
இவர்சார்ந்த இடமே காரணமாம் என்றார்;
அப்படியாய் புதுமாற்றம் அடைந்த அவனுக்கு
அப்பன் நானன்றோ? அவனே என்பிள்ளை!
அக்னி அருச்சுனா