மாமனிதர் ரவிராஜ் சிலையடியில் போராட்டம்

You are currently viewing மாமனிதர் ரவிராஜ் சிலையடியில் போராட்டம்

மாமனிதர் ரவிராஜ் அவர்களது மனைவியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளருமான சசிகலா-ரவிராஜ் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள ரவிராஜ் அவர்களது உருவச்சிலைக்கு முன்பாக அமைதி வழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது கொழும்பில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்த மாமனிதர் ரவிராஜ் அவர்களது மனைவி சசிகலா-ரவிராஜ் அவர்கள் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு கட்சிகளின் அடிப்படையில் பெறப்பட்ட விருப்பு வாக்குகள் கணக்கெடுக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சி சார்பில் 2ம் இடத்தில் இருந்ததாக கூறப்பட்ட சசிகலா-ரவிராஜ் இறுதியில் நான்காவதாக வந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில் யாழ். தேர்தல் மாவட்ட வாக்குகள் எண்ணப்பட்ட யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் கடந்த வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளிக் கிழமை அதிகாலை வரை குழப்பமான சூழல் நிலவியது. இதன்போது விசேட அதிரடிப்படையினரால் அங்கிருந்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.

இத்தாக்குதல் சம்பவத்தில் சசிகலா-ரவிராஜின் மகள் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டிருந்தனர்.

மேற்குறித்த நிகழ்வுகளின் அடிப்படையில் நடந்தோறிய அநீதிக்கு நீதி கோரியும் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி அமைதிவழி போராட்டம் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சாவகச்சேரியில் அமைந்துள்ள தென்மராட்சி பிரதேச செயலக வளாகத்திற்கு முன்பாக உள்ள மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்று வரும் அமைதிவழிப் போராட்டத்தில் மாமனிதர் ரவிராஜின் குடும்ப உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணும் நடவடிக்கையின் போது திட்டமிட்ட வகையில் மோசடி இடம்பெற்றதாகத் தெரிவித்து மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலையின் முகத்தினை கறுப்புத் துணியினால் மூடியும் கால் கைகளை சிவப்பு, மஞ்சள் துணிகளால் கட்டப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள