வவுனியா- கணேசபுரத்தில் நலன்புரி உதவித் திட்ட முறைகேட்டுக்கு எதிரான போராட்டத்தில் மாற்றுத்திறனாளியிடம் சிறீலங்கா காவற்துறை பொறுப்பதிகாரி ஒருவர் முறைகேடாக நடந்துகொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்கள் நேற்றையதினம்(28.06.2023) போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் போராட்ட இடத்திற்கு வருகை தந்த பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
எனினும் மக்கள் கிராம சேவையாளர் அவ்விடத்திற்கு சமூகளிக்கும் வரை தாம் செல்ல மாட்டோம் என தெரிவித்த நிலையில் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களை பலவந்தமாக தள்ளி வெளியேற்ற முயன்றதுடன், கதிரையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளியான முதியவரை தள்ளி, அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றைக்குள் வீசியுள்ளார்.
சிறீலங்கா காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது,குறித்த பொறுப்பதிகாரி முதியவரிடம் அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என மக்கள் தெரிவித்தமையினையடுத்து பொறுப்பதிகாரி அவரிடம் மன்னிப்பு கோரினார்.
எனினும் பாதிக்கப்பட்ட நபர் பொறுப்பதிகாரியின் பதிலுக்கு உடன்படவில்லை என்பதுடன் தலைமை காரியாலயத்தில் முறைப்பாடு செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
தனக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விசேட தேவைக்குட்பட்ட நபர் மீது பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னெடுத்த மனிதாபிமானமற்ற செயற்பாடு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.