தென்மராட்சி – எழுதுமட்டுவாள் வடக்கு, மிருசுவில், ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணியை 52வது இராணுவ படைப் பிரிவின் பயிற்சி முகாம் அமைப்பதற்காக நில அளவீடு செய்து சுவீகரிக்கும் முயற்சி இன்று காலை 9 மணியளவில் முறியடிக்கப்பட்டது.
நில அளவைத் திணைக்களத்தினால் இந்த நில அளவீட்டு சுவீகரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இந்த சுவீகரிப்பு முயற்சியை முன்னதாக அறிந்த நிலையில் காலை 9 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்ற காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் திரண்டு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் நில அளவீடு செய்வதை நிறுத்த நில அளவையாளர் திணைக்களம் மறுத்ததால், 10.30 மணி முதல் 11 மணி வரையில், ஏ9 வீதியை போராட்டக்காரர்கள் முடக்கி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால் பல வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில், காணப்பட்டதுடன், போராட்டக்காரர்களினால் பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பிரதேச செயலாளர் குறித்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையிலும், குறித்த இடத்தில் இருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரி ஒருவர் படை முகாமிற்குள் பிரவேசிக்க முயன்றதாலேயே எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இறுதியில் நில அளவீட்டு முயற்சியை தற்காலிகமாக கைவிட்டு நில அளவையாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
போராட்டத்தில் முன்னாள் எம்பி ஈ.சரவணபவன், எம்பி சி.சிறிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிசோர் மற்றும் பல அரசியல்வாதிகள் பங்கேற்றனர்.