30 வருடங்களுக்கு முன்னால் வழக்கொழிந்துபோனது எனக்கருத்தப்பட்ட “ஒலிப்பேழை / Audio Cassette” மீண்டும் புழக்கத்துக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
“இறுவட்டுக்கள் / Compact Disc / CD” அறிமுகப்படுத்தப்பட்ட ஏக காலத்தில், 1980 களின் இறுதியில் பாவனையிலிருந்து மெல்லமெல்ல “ஒலிப்பேழைகள்” அருகிப்போனதும், பின்னர் “MP3, WAV உள்ளிட்ட தொழிநுட்பங்களின் வருகையால் “இறுவட்டுக்கள்” அருகிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. “MP3” மிக அதிகமாக இப்போது பாவனையில் இருப்பதோடு, ஒரு பாடலை இம்முறையில் சேமித்துக்கொள்வதற்கு மிகமிக குறைந்தளவு இடமே தேவைப்படுவதாலும், மிகக்குறைந்த சேமிப்பகங்களைக்கொண்ட இலத்திரனியல் சாதனங்களிலும் இம்முறையில் அதிகமான பாடல்களை சேமிக்க முடியுமென்பதாலும் “MP3” தொழிநுட்பம் புகழ் பெற்றது.
எனினும், “Lady Gaga” உள்ளிட்ட பிரபலங்கள் தமது சமீபத்திய பாடல் தொகுப்புக்களை “ஒலிப்பேழை”களில் பதிவு செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளதாகவும், பிரித்தானியாவில் இந்த “ஒலிப்பேழைகள்” மீண்டும் பிரபல்யம் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் புழக்கத்திலிருந்துவந்த “இசைத்தட்டுக்கள் / LP Records” வழக்கொழிந்து போனதும், மீண்டும் இப்போது அவை புத்துயிர் பெற்று பிரபலமாகியுள்ளதும் போலவே, “ஒலிப்பேழைகள்” மீண்டும் பிரபல்யமாகுமெனவும் மேலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.