மீண்டும் ஒரு தேசமாக்குவதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியம்!

You are currently viewing மீண்டும் ஒரு தேசமாக்குவதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியம்!

தமிழர்களுக்கேயான தனித்துவமான மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – மல்லாவி நகரில் அமைந்துள்ள துணுக்காய் பாண்டியன்குளம் தொழில்நுட்ப கலை கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எங்களிடம் ஒரு நடைமுறை அரசு இருந்தது அங்கே அனைத்தையும் நாங்கள் கண்டோம். எங்களை நாங்களே ஆட்சி செய்தோம், அந்த ஆட்சிக்குப் புலம்பெயர் தேசத்து மக்கள் தான் முழுப் பங்களிப்பையும் செய்தார்கள்.

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிதைந்துபோன எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்பி மீண்டும் ஒரு தேசமாக்குவதற்கு அனைவரது பங்களிப்பும் மிக முக்கியமாகவுள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. அந்த பங்களிப்பு என்பது சிறிய சிறிய உதவிகளாக இருந்தாலும் கூட காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்று சொல்வார்கள். அது போல புலம்பெயர் தேசத்தவர்களின் உதவி எமக்கு பெரிதும் உதவியாக அமைகின்றன.

புலம்பெயர் உறவுகளுக்கும் இந்த இடத்திலேயே நன்றியைக் கூறிக் கொள்ளக் கடமைபடுகின்றோம். நாங்கள் எங்களுடைய எதிர்கால தேசத்தைக் காண நாங்கள் விரும்புகின்றோம். நாங்கள் ஒரு தனித்துவமான இனம் வடக்கு, கிழக்கு எங்களது தாயகம் இந்த தாயகத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களை நாங்களே ஆண்டு அனுபவித்திருக்கின்றோம்.

எங்களுக்கென தனித்துவமான பண்பாடு இருக்கின்றது. எங்களுக்கு என தனித்துவமான மொழி இருக்கின்றது. இந்த தேசத்திற்கென தனித்துவமான பொருளாதாரம் இருக்கின்றது. இவை அனைத்தையும் கொண்டு சர்வதேச சட்டங்களின்படி எம்மை நாமே ஆள்வதற்கு உரிய ஒரு தேசமாக நாங்கள் இருக்கின்றோம்.

துரதிருஷ்டவசமாக ஐந்நூறு ஆண்டுகளாக நாங்கள் அடிமைகளாக வாழ்ந்து இருக்கின்றோம். குறிப்பாக 74 ஆண்டுகள் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் அடிமைகளாகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த அடிமைத்தனத்திலிருந்து நாங்கள் விடுபடுவதற்காக இலங்கையின் ஒற்றையாட்சி என்ற பெரும்பான்மை ஆட்சி கட்டமைப்பை நிராகரித்து ஒரு தேச அங்கீகாரத்துக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கான தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற போது தான் அந்த தேசத்தில் தனித்துவமான எங்களது கலை கலாச்சாரங்களைப் பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாப்பதற்கும் எங்களது மொழியைப் பாதுகாப்பதற்கும் இனத்தின் இருப்பை பாதுகாப்பதற்கும் இந்த அமையம் பெரும் பங்காற்றி வருகின்றது.

நாங்கள் எழுபத்து நான்கு ஆண்டுகளாகப் பெரும்பான்மை ஆட்சியை நிராகரித்து தமிழர் தேசத்துக்கான சுயாட்சியைக் கோரி போராடி வருகின்றோம். இந்த பாதையில் நாங்கள் பயணிப்பதற்குத் தொடர்ந்தும் உறுதியாக உறுதுணையாக இருப்பீர்கள்.

இலங்கை அரசானது ஒற்றையாட்சி என்ற புதிய அரசியல் அமைப்பைக் கொண்டு வர இருக்கிறது. ஒற்றையாட்சியை ஆதரிப்பதற்குத் தமிழ் தரப்புகள் தயாராகி வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நீங்கள் விழிப்புடன் செயற்படவேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டம் மாகாண சபைகள் என்பது எங்களது மண்ணில் முப்பத்தி நான்கு ஆண்டுகளாக இருக்கின்ற ஒரு இறந்து போன ஒரு எலும்புக் கூடாகவே பார்க்கப்படுகின்றது. அதை நாங்கள் ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்வோமாக இருந்தால் இது எங்களை நாங்களே அழித்துக் கொள்வதற்கும் எங்களை நாங்கள் பெரும்பான்மை இனத்தினுடைய அடிமைகளாக ஆக்குவதற்கும் வாய்ப்பாக மாறும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments