மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் ஆறு பண்ணையாளர்களை இன்று காலை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிலர் கடத்திச் சென்று கட்டி வைத்து அடித்ததுடன் அவர்களை அடையாளம் தெரியாத இடத்திற்கு கடத்திச் சென்று விட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடைய தொலைபேசிகளையும் பறித்து வைத்தவுடன் அவர்களுடைய தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து அடையாளம் தெரியாத இடத்திற்கு கடத்திச் சென்றுவிட்டதாக நேரில் கண்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலை மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட 6 பண்ணையாளர்களையும் தேடிச் சென்ற சக பண்ணையாளர்களையும் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபட்டு வருபவர்கள் அச்சுறுத்தி துரத்தியதாகவும் அதனால் பண்ணையளர்கள் அச்சத்தில் திரும்பி வந்துள்ளதாக பண்ணையாளர்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றிரவு இனம் தெரியாதவர்கள் பலர் ஆயுதங்களுடன் வந்து பண்ணையாளர்களை அச்சுறுத்தியதாகவும், பண்ணையாளர்களின் குடியிருப்புக்களை சோதனை செய்து ஆயுதங்கள் வைத்து இருக்கிறீர்களா என கேட்டு அச்சுறுத்தியதாகவும் அவ்விடத்தில் இருந்த பண்ணையாளர்களின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கரடியணாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்