பிருத்தானியாவில் ஆரம்பமாகியது நீதிக்கான ஈருருளிப்பயணம் – YouTube
தமிழீழ தேசமக்கள் சிறிலங்கா தேசத்தின்
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கெதிரான
நீதிக்காக பிரித்தானியாவில் இருந்து
ஐ.நா வரை தமிழீழத்திற்கான விடுதலைப்
பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்கள்!
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 49 வது கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம்
நடைபெறவிருக்கும் சமநேரத்தில் தமிழீழ
மக்கள்மேல் நிகழ்த்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கான சர்வதேச சுயாதீன
விசாரணை மூலம் ஈழத்தமிழ் மக்களுக்கான நீதியும் நீடித்த நிலையான
அரசியற்தீர்வையும் வலியுறுத்தி 24 வது
தடவையாக மிதியுந்துப்பயணம் இன்று (16/02/2022)
காலை 10 மணிக்கு ஆரம்பமாகி உள்ளது.
அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நீதிக்கான தொடர் மிதியுந்துப் போராட்டப்பயணம், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய
நாடுகளான நெதர்லாந்து, பெல்சியம், யேர்மன், பிரான்ஸ், ஊடாக அரச, அரசசார்பற்ற உயர்மட்டப் பரப்புரைச் சந்திப்புக்களை நடாத்தியவாறு சுவிஸ்
ஐ.நா மன்றத்திற்கு முன்பாக உள்ள
ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்
மார்ச் 7ஆம் திகதி நடைபெறும் பேரணியிலும் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் இணையவுள்ளது.
பிரித்தானியாவில் இன்று ஆரம்பித்த
போராட்டப்பயணமானது ஐ.நா மனித
உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும்
முக்கிய நாடான பிரித்தானிய அரசு
தமிழ்மக்களின் இன அழிப்பிற்கான
நீதி வேண்டிய போராட்டத்திற்கு காத்திரமான நகர்வுகளை முன்நகர்த்துமாறும் வரலாற்று அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தமிழீழமே தீர்வாக
அமையமுடியும் என்பதையும் விபரித்து
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால்
பிரித்தானிய பிரதமருக்கும் பிரதமரின் அலுவலகமூடாக வெளிவிவகார அமைச்சுக்கும் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ்மக்களின் நீதிக்கான போராட்டத்தை பிரித்தானிய அரசமட்டத்திலும் பாராளுமன்றத்திலும்
கொண்டு சென்று சர்வதேச ஆதரவுடன்
தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவுகோரி ஆளும்கட்சிப்
பாராளுமன்ற உறுப்பினரும் அனைத்துக்கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவருமான Mr. Elliot Colburn MP அவர்களையும் பிரதான எதிர்க்கட்சி
பாராளுமன்ற உறுப்பினரும் நீண்டகாலம்
தமிழ்மக்களின் உரிமைக்காக குரலெழுப்பி போராடி வருபவருமான Siobhain McDonagh MP அவர்களையும்
சந்தித்து மகஜர்களை வழங்கியவாறு
பிரித்தானியப் பிரதமர் இல்லத்திலிருந்து
நீதிக்கான தமிழீழ விடுதலைப் போராட்ட
நெடும்பயணம் அதன் அடுத்த நகர்வாக
சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ள
நெதர்லாந்தை நோக்கி மிகப்பெரும்
எழுச்சியோடு முன்நகர்கின்றது. தமிழீழம்
என்ற இலட்சியத்தை தமிழீழ மக்களின்
தாகமாக சுமந்து இலட்சிய உறுதியோடு தொடரும் மிதியுந்துப்பயணம் கடுங்காலநிலைகளையும் எதிர்கொண்டு பயணிக்க இருக்கும் வேளையில் தமிழ்மக்கள் அனைவரும் இன உணர்வோடு அனைத்து நாடுகளிலும் பேராதரவை வழங்குமாறு அனைத்துலகக் கட்டமைப்பில் இயங்கும் அனைத்து நாடுகளிலுமுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.










