ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணொருவர் கூட்டு வன்புணர்வு செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அருகே வடகாடு எனும் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா(45). நேற்று முன்தினம் சந்திரா கடல்பாசி சேகரிக்க சென்றபோது, வடமாநிலத்தை சேர்ந்த சிலர் கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் சந்திராவை சிலர் கூட்டு வன்புணர்வு செய்து எரித்து கொன்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ஒடிசாவை சேர்ந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மீனவப் பெண் கொலை குறித்து அறிந்த அவரது உறவினர்கள், வடகாடு கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். வடமாநில இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், அப்பெண்ணின் குடுப்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறி, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பலமணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சாலையில் டயர்களை தீ வைத்து எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் ராமேஸ்வரம் கலவர பூமியாக மாறியுள்ளது.