நோர்வேயில், மீன்களை இனங்கண்டு கொள்வதற்கு “கருவிழி / Iris / Face ID” ´சோதனை முறை பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மீன்வளத்தில் கொடிகட்டிப்பறக்கும் நாடுகளில் பிரதானமாக விளங்கும் நோர்வேயில், புகழ் பெற்ற “சால்மன் / Laks” வகை மீன்கள் பரவலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகை மீன்களுக்கு சர்வதேச சந்தைகளிலும், உள்நாட்டிலும் பாரிய வரவேற்பும் தேவையும் இருப்பதால், செயற்கை முறையிலான வளர்ப்பில் இவ்வகை மீன்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவதோடு, ஆறுகள் மற்றும் இயற்கையான நீர்நிலைகளில் வளரும் இவ்வகை மீன்களும் பெருமளவில் கவனத்தை பெறுகின்றன.
குறிப்பாக, ஆறுகளிலும், இயற்கையான நீர்நிலைகளிலும் வளரும் “சால்மன்” மீன்கள், செயற்கை முறையிலான வளர்ப்பு இடங்களில் வைத்து வளர்க்கப்படும் “சால்மன்” மீன்களை விடவும் விலை அதிகமாக இருக்கும் நிலையில், செயற்கை வளர்ப்பு இடங்களிலிருந்து அவ்வப்போது தப்பித்துவிடும் “சால்மன்” மீன்கள், ஆறுகளிலும், இயற்கை நீர்நிலைகளிலும் வளரும் “சால்மன்” மீன்களோடு கலந்து விடுவதால், இம்மீன்களை இனங்கண்டு தரம்பிரிக்கும்போது நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இச்சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காகவே “கருவிழி / Iris / Face ID” தொழிநுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரிய குழாய்களுக்குள்ளால் இம்மீன்கள் கடத்தப்படும்போது, அம்மீன்களின் கருவிழிகளை “ஊடுகதிர் / Scan” முறையில் பதிவு செய்வதன் மூலம், அவை செயற்கை முறையில் வளர்க்கப்பட்டவையா அல்லது ஆறுகள் மற்றும் இயற்கையான நீர்நிலைகளில் வளர்ந்தவையா என்பதை இலகுவாக கண்டறிய முடியுமெனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக மக்கள் பயன்படுத்தும் கைத்தொலைபேசி, கணினிகள் உள்ளிட்ட உயர் தொழிநுட்ப சாதனங்களில் பயன்பாட்டிலிருக்கும் இத்தொழிநுட்பமுறை, மீன்வளர்ப்பிலும் பயன்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.