முரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி!

You are currently viewing முரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி!

அதுவொரு ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்த காலம். 26.12.2004 அன்று தமிழர் தாயகத்தின் கரையோர கிராமங்களை கடல் தனது பசிக்கு முழுமையாக இரையாக்கியிருந்தது. கடல் எமது மக்களுக்கு வாரி வாரி அள்ளித் தந்த வளங்களை மறுபடியும் தானே வாரிச் சுருட்டி எடுத்துக் கொண்டும் விட்டது. ஓர் இரவில் அலை ஆடிய கோரத் தாண்டவத்தால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து நின்றிருந்தார்கள். எங்கும் மரண ஓலம். பல வருட போர் தராத வலியை, இழப்பை ஒரு நொடிப் பொழுதில் கடல் தந்து விட்டு மறுபடியும் அமைதியாகி விட்டது. 

விடுதலைப்புலிகள் இயக்கம் நில மீட்பு போருக்கான மாதிரி சண்டைப் பயிற்சிகள் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட வேவுத்தகவல்கள் எல்லாம் உறுதி செய்யப்பட்டு பெரும் எடுப்பில் பாய்ச்சல் ஒன்றுக்கு தயாராகியிருந்தது. ஆனபோதிலும் கூட, அனைத்தையும் கைவிட்டு விட்டு பாதிக்கப்பட்ட மக்களை உடல் உள ரீதியாக துரிதகதியில் மீட்டெடுப்பதும், கரையோர பிரதேசங்களை சுத்தப்படுத்தி வழமைக்கு கொண்டு வருவதும் ஆன பணிகளில் போராளிகளை இறங்கி தீவிரமாக வேலை செய்யுமாறு தலைவர் பணித்து விட்டார். குறிப்பாக இந்த மீட்புப் பணிகளில் சண்டைப் படையணிகளின் தவிர்க்க முடியாத பிரிவுகள் என்று பார்த்தால் கடற்புலிகள், மருத்துவதுறை போராளிகளின் பங்களிப்பு கணிசமானது. தமிழ் மக்களுக்கு சுனாமி அடி துயரம் என்றால், ஓயாத அலைகள் தொடர் நிலமீட்பு நடவடிக்கை ஒன்றின் நிச்சயிக்கப்பட்ட வெற்றியும் ஒத்தி வைக்கப்பட்டது இன்னுமொரு துயரம் தான். குடாரப்பு (இத்தாவில்) தரையிறக்கம் உள்ளிட்ட பல வெற்றிச் செய்திகளை தந்த கடல், இம்முறை எமது வெற்றியை பறித்துக் கொண்டு விட்டது.)

துரித கட்ட மீட்புப் பணிகளில் கடற்புலிகள், காவல்துறை, மருத்துவதுறை, தமிழர் புனர்வாழ்வுக்கழகம்  களமிறக்கப்பட்டு நாமும் மீட்பு மற்றும் இடர் முகாமைத்துவ பணிகளின் நிமித்தம் முல்லைத்தீவு கள்ளப்பாட்டுக்கும், உடுத்துறை ஆழியவளைக்கும் மாறி மாறி கயஸ் ரக வாகனத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். பாடசாலைகளில் அவசர ஏற்பாடாக தங்க வைக்கப்பட்டுள்ள (வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து போயுள்ள) மக்களால் இன்னும் நெருக்கடிகள் அதிகமாயிற்று. இத்தகைய ஒரு பேரிடர் காலத்தில் அவர்களுக்கு தொற்று நோய்கள் வராமல் தடுப்பதும், சமைத்த உணவுகளை சுகாதார முறைப்படி வழங்குவதும் பெரும் சவாலானது தான்! (ஆயினும் போராளிகளின் அர்ப்பணிப்பால் குறுகிய காலத்துக்குள் மீண்டெழுந்தது தமிழர் தேசம்.) குறிப்பாக  முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மக்கள் வெள்ளத்தால் பிதுங்கி வழிகிறது. வார்த்தைகளில் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாத பேரவலம். ஆழிப்பேரலை புரட்டிப் போடாத தூரப் பிரதேசங்களைச் சேர்ந்த உறவுகள் பாதிக்கப்பட்டவர்களை வந்து பார்த்து நலம் விசாரிப்பதும், அலையால் தவறியவர்களை தேடிக் கண்டுபிடித்து குடும்ப உறுப்பினர்களிடம் இணைத்து வைப்பதும் என்று ஒரு வாரம்… இரண்டு வாரம்… மூன்று வாரம்… இப்படி நாட்கள் நகர்கின்றன. 

இவை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் சிறுவர்களை ஆற்றுகைப்படுத்தும் உளவள நிகழ்ச்சி ஒன்றின் பிரகாரம் ஓமந்தை சோதனைச்சாவடியை வந்தடைகிறார்கள் சிறீலங்கா கிரிக்கெட் அணியின் சில வீரர்கள். அந்தக் குழுவில் முத்தையா முரளிதரனும் ஒருவர். 

அவ்விடத்திலிருந்து அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்ணைக்கு செய்தி அனுப்பப்படுகின்றது. வந்திருக்கும் குழுவின் நோக்கம் பற்றியும் வந்திருக்கும், விளையாட்டு வீரர்கள் பற்றியும். அதை அப்படியே தலைவருக்கு தெரிவிக்கிறார் தமிழ்ச்செல்வன் அண்ணர். குறித்த தகவல் பரிமாற்றத்தில் ‘முத்தையா முரளிதரனும் வந்திருக்கிறார்’ என்பதை (சிரித்துக் கொண்டே…) அழுத்திக் கூறுகிறார் தமிழ்ச்செல்வன் அண்ணர். வந்திருக்கும் வீரர்களில் முரளிதரனின் பெயரை மட்டும் தலைவருக்கு குத்திக்காட்டி கூற காரணம் ஒன்று இருந்தது. 1996ம் ஆண்டு உலக கோப்பையை சிறீலங்கா கிரிக்கெட் அணி வெற்றி கொண்ட பின்னர், முரளிதரன் சர்வதேச ஆங்கில மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பில் தலைவர் ஏற்கனவே முரளிதரன் மீது கடும் கோபத்திலும் விசனத்திலும் தான் இருந்தார். தலைவரின் நிலைப்பாட்டை தமிழ்ச்செல்வன் அண்ணையும் அறிந்தே வைத்திருந்தார். அதனால் தான் வந்திருக்கும் வீரர்களில் முரளிதரனின் பெயரை மட்டும் தலைவருக்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டியதாயிற்று. 

நான் ஏலவே குறிப்பிட்டது போல, ஆழிப்பேரலை அனர்த்தத்தை தலைவர் ஒரு தேசியப் பேரிடராகத் தான் கருதினார். அதனால் தான் சண்டைப் படையணிகளைக் கூட களத்தில் இறக்கி மீட்புப் பணிகளில் ‘ஒரு அரசு இயந்திரம் போல’ பணி செய்யுமாறு போராளிகளுக்கு பணித்திருந்தார். ஒரு தேசியப் பேரிடர் காலத்தில் இப்போதைக்கு தலைவரின் முழுக்கவனமும் மக்களை மீட்டெடுத்து இயல்பு நிலைமைக்கு திருப்புவதும், பேரலை உருக்குலைத்த கிராமங்களை துரித கதியில் மீள் உருவாக்கம் செய்விப்பதும், மறுபடியும் தொழில் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும், வாழ்வாதாரத்துக்கான அடித்தளத்தை இடுவதும் ஆகத்தான் இருந்தது.

ஆகவே தான், உள்ளே வந்து (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள்) வேலை செய்ய அனுமதி கேட்ட (சிறீலங்கா அரசு, அரசு சார்பற்ற) எந்த நிறுவனங்களுக்கும் புலிகள் இயக்கம் மறுப்புத் தெரிவிக்கவில்லை. இதனால் நாளாந்தம் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் கிளிநொச்சி தலைமை அலுவலகம் என்.ஜி.ஓக்களால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. (யாரும் உள்ளே வரலாம் எனும் புலிகளின் மனிதாபிமான தளர்வுநிலையை, தலைவரின் பலவீனம் என்று தப்புக்கணக்கு போட்டு உள்ளே வந்த சிறீலங்கா அரச புலனாய்வு பிரிவுகளின் முகவர் அமைப்புகளை புலிகள் எப்படிக் கையாண்டார்கள்? எப்படியெல்லாம் மடை மாற்றினார்கள்? என்பது வேறு கதை. அதை பிறிதொரு பதிவில் கூறலாம்.)

இனி விசயத்துக்கு வருவோம். ‘முத்தையா முரளிதரனும் வந்திருக்கிறார்’ என்பதை (சிரித்துக் கொண்டே…) தமிழ்ச்செல்வன் அண்ணர் அழுத்திக் கூறியதும், அதற்கு தலைவர் சொன்ன மறுபதில் இதுதான்! “முரளிதரனுக்கு எங்கட மண்ணில இருந்து எடுத்த ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க கொடுக்கக் கூடாது. என்ன செய்ய வந்திட்டான். உள்ள எடுக்க வேணாம். (இந்த ‘உள்ள’ என்பதன் அர்த்தம்: விடுதலைப்புலிகள் தமது நடைமுறை நிர்வாக அரசை பலமாக நிறுவி கோலோச்சிய கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளுக்கு அனுமதிக்க வேண்டாம்.) மன்னார் பக்கத்தால திருப்பி விடுங்கோ. அங்க எதையாவது செய்திட்டு போகட்டும்.”

இங்கு கவனிப்புக்குரிய மற்றுமொரு விடயம் ஒன்று உண்டு. தலைவர் வார்த்தைகளை விடும் போது நின்று நிதானித்து மிகவும் பக்குவமாகத் தான் சொல்லுவார். இதில் ‘எங்கட மண்ணில இருந்து எடுத்த’ என்ற அவரது வார்த்தை கூட சொல்லாத பல அர்த்தங்களை – சேதிகளை உலகத்துக்குச் சொல்லி நிற்கிறது. அதாவது கொழும்பில இருந்து வரும் போத்தலில அடைக்கப்பட்ட தண்ணீரை முரளிதரனுக்கு கொடுங்கோ… அதைக் குடிக்கத்தான் அவருக்குத் தகுதி உண்டு. மற்றையது தமிழீழ மண் வீரம் செறிந்த மண். அடிமைத்தனத்துக்கு எதிராக களமாடி வீழ்ந்த பல ஆயிரம் மான மாவீரர்களின் இரத்தமும் தசைகளும் கலந்திருக்கும் மண். அத்தகையதொரு பெருமைக்குரிய மண்ணிலிருந்து சுரக்கும் நீரின் ஒரு துளி கூட முரளிதரனின் நாக்கை நனைத்துச் சிறுமைப்பட்டு விடக்கூடாது! ஆகவே முத்தையா முரளிதரனின் எந்த நாக்குப் பேசியதோ, அந்த நாக்குக்கு நீரால் அளிக்கப்பட்ட பதிலாக, தலைவரின் நீர்க் கோட்பாட்டுத் தத்துவங்களில் ஒன்றாகவே இதுவும் உலக மக்களால் நோக்கப்பட வேண்டும்.  

எனவே ஓமந்தையில் வைத்து கிரிக்கெட் வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு அணியினர் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை வந்தடைந்து குறித்த தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்வித்தார்கள். நானும் அவர்களை ஒரு சிங்கள மொழிபெயர்ப்பு ஆசிரியை ஒருவரின் உதவியுடன் நேரில் சென்று சந்தித்து பேசினேன். முரளிதரனாே, மன்னாரின் யுத்த சூனியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் பாடசாலைக்கு அனுப்பப்பட்டு அப்படியே உயிலங்குளம் சோதனைச்சாவடியால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

சரி… முரளிதரன், அந்த சர்வதேச ஆங்கில மொழிப் பத்திரிகை பேட்டியில் அப்பிடி என்ன தான் கூறியிருந்தார்? உலக கோப்பையை சிறீலங்கா கிரிக்கெட் அணி வெற்றி கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட அந்த பேட்டியில் நிருபர் கேட்கிறார்: இலங்கையில் இனப்பிரச்சினை கொதித்துக் கொண்டிருக்கிறது. இப்போதும் கூட வடக்கு கிழக்கில், கொழும்பில் தாக்குதல்கள் – குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. நீண்ட காலமாக தொடரும் தமிழ் – சிங்கள இன முரண்பாடுகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்தநிலையில் ஒரு தமிழனாக சிறீலங்கா அணி கோப்பையை வெல்ல பங்களிப்பு செய்துள்ளீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்? 

இந்தக் கேள்விக்கு முரளிதரன் வழங்கிய பதில்: தமிழனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன். ‘தமிழன்’ அப்பிடிச் சொல்வதால் எனக்கு எந்தப் பெருமையும் கிடையாது.

இதற்கு தலைவர், “என்னடாப்பா! நாங்கள் ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம். தமிழ் இனம் தங்கட விடுதலைக்காக கிளந்தெழுந்து போராடுவதை, அதுவும் நாங்கள் அடி வாங்கின காலம் போய் இப்ப திருப்பி அடிச்சுப் பலமாக இருக்கிற இந்த நேரத்தில போய் வெட்கப்பட வேண்டிய ஒரு செயல் என்று முரளிதரன் சொன்னால்? வெட்கப்பட வேண்டியது நாங்கள் அல்ல. அவன் தான்.” என்று தலைவர் போராளிகள் சந்திப்பு ஒன்றில் சொல்லி வைத்திருந்தவர். 


(தகவல் மூலம்: செஞ்சுடர் மாஸ்டர், போர்ப்பயிற்சி ஆசிரியர், வடபோர்முனை, தமிழீழம்.)

பகிர்ந்துகொள்ள