முல்லைத்தீவு மாத்தளன் கடற்கரை பகுதியில் கடற்தொழிலாளர்களின் வாடிஒன்றினை இன்று அதிகாலை சுற்றிவளைத்த கடற்படையினர் அங்கிருந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி பணம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த வயோதிபர் ஒருவர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பெண்கள் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இன்று அதிகாலை வேளை மாத்தளன் பகுதியில் உள்ள வாடி ஒன்றினை சுற்றிவளைத்த கடற்படையினர் அங்கு இருந்து கடற்தொழிலாளர்கள் அனைவரையும் வெளியிட முடியாதவாறு முற்றுகையிட்டு பொல்லுகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வாடியினை உடைத்து வாடிக்குள் இருந்து மின்கலம்,மின்பிறப்பாக்கி,பணம்,இயந்திரங்களை எடுத்துசென்றுள்ளார்கள்.
அதிகாலை வேளை கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்து வீழ்ந்த வயோதிபரை கூட மருத்துவமனை கொண்டுசெல்லவிடாமல் தடைசெய்து சுற்றி நிற்றுள்ளார்கள்
இச்சம்பவம் குறித்து மக்கள் பலரிடமும் முறையிட்டுள்ளதாக தெரிவித்த மக்கள் கடற்படையினரின் அத்துமீறும் நடவடிக்கையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.எந்த காரணமும் இன்னி வாடியினை சுற்றிவளைப்பு செய்து என்ன காரணம் என்று கேள்வி கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்றுள்ளார்கள்.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடாத நிலையில் வாடியினை உடைத்து உள்நுழைந்து கடற்தொழிலாளர்கள் வைத்திருந்த பணம் மற்றும் உபகரணங்கள் சிலவற்றையும் கொண்டுசென்றுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.