முல்லைத்தீவு பாரதி மகாவித்தியாலய பாடசாலை மாணவர்கள் போராட்டம்!

You are currently viewing முல்லைத்தீவு பாரதி மகாவித்தியாலய பாடசாலை மாணவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு பாரதி மகாவித்தியாலய பாடசாலை மாணவர்கள் போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற அரை இறுதி எல்லேப் போட்டியில் இருந்து தமது பாடசாலை அணியின் ஒருவருடைய ஒழுக்கத்தைக் காரணம் காட்டி திடீரென விலக்கியமை ஏனைய மாணவர்களின் எதிர்பார்ப்புகளை மழுங்கடித்துள்ளதாக கூறியே இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் போராட்டமானது நேற்றைய  தினம் (26.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, பாடசாலைகளுக்கிடையிலான “எல்லே” போட்டிகள்  புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

குறித்த போட்டியில் பாரதி மகா வித்தியாலய அணியை எதிர்த்து முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மோதியுள்ளது.

வித்தியானந்தா முப்பது பந்துகளில் 4 ஓட்டங்களும் பாரதி மகா வித்தியாலயம் 10 பந்துகளில் நான்கு ஓட்டங்களையும் எடுத்துள்ளது.

இந்த நிலையில், “தமது வெற்றியைப் பறிப்பதற்காக வீரர் ஒருவர் பச்சை குத்தியுள்ளார் என்பதைக் காரணம் காட்டி குறித்த போட்டியிலிருந்து எமது பாடசாலையை அணியை விலக்கியுள்ளனர்.”

”நாம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் பங்கு பற்றிய நிலையில், பச்சை குத்தியதை அவதானிக்காதவர்கள் அரை இறுதிப் போட்டியில் மட்டும் அதனைக் காரணமாகக் காட்டியது ஏன்? ”

எமது பாடசாலை அணியின் வெற்றியை நீக்க வேண்டும் என்பதற்காகவே குறித்த செயற்பாடு இடம் பெற்றதாக நாம் கருதுகிறோம்.”

“எமது கோரிக்கைகளை கேட்பதற்கு முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வரவில்லை” என குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு வினவியபோது, மாணவன் பச்சை குத்திய காரணத்தினால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே போட்டிகளில் குறித்த அணி பங்கு பற்றிய நிலையில், மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் கண்டுகொள்ளாதது தவறு என கூறியதுடன், எழுத்து மூல முறைப்பாடு கிடைத்தால் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply