முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் பொது நினைவுத்தூபியும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் , கட்சியின் உறுப்பினர்கள் சென்று நிலவரத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,
நேற்றிரவு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலிக்காக கொண்டுவரப்பட்ட நினைவுக்கல் இன்று காலை காணாமல் போயுள்ளது. நினைவு முற்றமும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த பிரதேசம் பொலீஸாரினதும் இராணுவத்தினரதும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்ததுடன் வேறு யாரும் செல்லதற்கும் அனுமதிக்கப்பட்வில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக இப்பகுதி மக்களிடம் வினவியபோது இரவு அதிகாலை ஒருமணிக்கும் மூன்று மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இராணுவ சீருடை அணிந்தவர்களினால் அந்த கல் ஏற்றிச்செல்லப்பட்டதாக அறிய முடிகின்றது. நேற்றையதினம் கல்லை ஏற்றிவந்த மதகுருக்கள் , முள்ளளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் பொலிஸாரால் நெருக்கடி கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் பொலீஸாரும் இராணுவத்தினருமே நினைவுக்கல் களவாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
இன்று ஆட்சியிலுள்ள கோட்டபாய அரசாங்கம் தான் 2009 திட்டமிட்ட இனப்படுகொலை இடம்பெற்றபோது ஆட்சியில் இருந்தவர்கள். கோட்டபாயவே அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். இந்த திட்டமிட்ட இனவழிப்பிற்கு தமிழர்கள் சர்வதேச நீதியினைக்கோரி வருகின்றவேளை இன்று இந்த நினைவேந்தலைக்கூட செய்யமுடியாமல் இராணுவத்தினராலும் பொலீஸாராலும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. தமிழ் மக்கள் மீது இனவழிப்புச் செய்த இராணுவத்தினருக்கு தமிழர் தேசமெங்கும் நினைவுச்சின்னங்கள் இருக்கின்றன.
ஆனால் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களான தமிழருக்கு, போரிலே படுகொலை செய்யப்பட்ட அவர்கள் உறவுகளுக்கு அவர்கள் மண்ணில் ஒரு நினைவாலயத்தை வைத்து வணக்கம் செலுத்த முடியாத ஒரு நிலை உள்ளதென்றால் அதற்கான பிரதானமான காரணம் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்று நடைபெறாமல் உள்ளக விசாரணைக்கு பத்தாண்டு காலமாக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு தண்டனை வழங்குதலிலிருந்து தப்பித்து வந்ததன் விளைவாக தாங்கள் எதைச்செய்தாலும் அதற்காக பொறுப்புக்கூறத்தேவையில்லை என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்ற நிலைமையில்தான் இந்த காடைத்தனத்தை செய்கின்றார்கள்.
குறிப்பாக இந்த கோட்டபாய அரசாங்கம் பதவியில் இருக்கின்ற பொழுதுகூட கடந்த மார்ச் 23ம் திகதி ஜெனீவாவிலே 46/1 தீர்மானம் என்ற அந்த உள்ளக விசாரணைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதன் எதிரொலியாகத்தான் நாங்கள் இந்த சம்பவத்தைப் பார்க்கவேண்டி இருக்கின்றது.ஆகவே இந்த சம்பவத்திற்கு இவ்வாறான ஒடுக்குமுறையை மேற்கொண்டு வருகின்ற இராணுவத்தினரும் பொலீஸாரும் பதவியில் இருக்கின்ற கோட்டா அரசாங்கம் மாத்திரமல்ல. இந்த அரசாங்கம் செய்த படுகொலைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல விடாமல் தடுத்து உள்ளக விசாரணைக்கு வாய்ப்புக்கொடுத்து சர்வதேச சக்திகளினுடைய தேவைக்காக தமிழர்களுடைய விவகாரம் பயன்படுவதற்குத் துணை நின்றவர்களும் இதற்குப்பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.