வேறு சில ஜரோப்பிய நாடுகளைப்போல பிரான்ஸும் ‘மெபைல் அப்ளிகேஷன்’ மூலம் நோயாளிகளைக் கண்காணித்து வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்தும் திட்டம் ஒன்றைத் தயாரித்துவருகிறது.
“StopCovid” எனப் பெயரிடப்பட்டுள்ள டிஜிட்டல் திட்டத்தின் படி நாட்டின் பிரஜைகள் எவரும் தங்கள் சிமாட் போன்களில் இந்த அப்ளிகேஷனை சுயவிருப்பத்தின் பேரில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமது சூழலில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவரை மற்றவர்கள் இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளவும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் இந்த வழிமுறை உதவும். உள்ளிருப்புக் காலம் முடிவடைந்து மக்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படும் சமயத்தில் இந்த மொபைல் செயலி மிகவும் பயனுள்ளதாக மாறும் என நம்பப்படுகிறது.
உதாரணமாக அடிக்கடி இருவர் நெருங்கிப் பழகுகின்ற சந்தர்ப்பங்களில் ஒருவரின் தரவுகளை அடுத்தவரது போனில் உள்ள இந்த செயலி தனது சேமிப்பில் Bluetooth மூலம் பதிவு செய்து கொள்ளும். இவ்வாறு பழகுகின்ற பலரதும் தரவுகள் சேமிக்கப்படும் போது அவர்களில் எவருக்காவது பின்னர் தொற்று ஏற்படும் பட்சத்தில் இந்த செயலி அடுத்தவர்களுக்கு அது பற்றி எச்சரிக்கை செய்யும்.
ஆனால் சிமாட் போனின் இருப்பிடத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதன் நடமாட்டத்தை(location) வைத்து மதிப்பிடப்படும் இந்தக் கண்காணிப்பு முறை நோயாளிகளை சரியாக இனங்காண்பதற்கு எந்தளவுக்குப் பயன்படும் என்ற கேள்விகளும் எழுகின்றன.
சம காலத்தில் ஜெர்மனி உட்பட ஜரோப்பிய நாடுகள் சிலவும் கூட்டாக இந்த டிஜிட்டல் கண்காணிப்புத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருகின்றன.
தொழில் நுட்பரீதியில் பெரும் பயனுள்ளதாக நம்பப்படும் இத்திட்டம் அரசியல் நோக்கில் பலத்த விமர்சனங்களைச் சந்திக்கிறது.
மனித உரிமைகளுக்கு முரணாக, ஒருவருடைய நடமாட்டம், தனிப்பட்ட தரவுகள், மற்றும் மருத்துவ ரகசியங்களைப் பகிரங்கப் படுத்த அனுமதிக்கும் இந்தத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. ஆனால் சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் வைரஸ் பரவலைக் குறைக்க இது போன்று பிரஜைகளின் நடமாட்டங்களைக் கண்காணிக்கும் டிஜிட்டல் தொழில்நுட் பத்தைப்பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளன.
பொது இடங்களில் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை அவர்களுக்குத் தெரியாமலேயே பதிவு செய்யும் கருவிகளைக் கூட சில நாடுகள் பயன்படுத்தின எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
(நன்றி குமாரதாஸன்)