அவுஸ்திரேலியா – மெல்பேர்ண் நகரில் இன்று புதன்கிழமை காலை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிட்னி மற்றும் கன்பரா நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இன்று புதன்கிழமை உள்நாட்டு நேரப்படி காலை சுமார் 9:15 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்பகுதி மெல்பேர்ண் நகரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் அமைந்திருந்ததாக அவுஸ்திரேலிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ணில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அச்சம் காரணமாக மக்கள் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் கூடினர்.
இந்த நிலநடுக்கத்தால் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை. சில இடங்களில் கட்டங்களில் சிறிய சேதங்கள் ஏற்பட்டன. மேலும் சில இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
பல தசாப்தங்களின் பின்னர் மெல்பேர்னில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் தங்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதேவேளை, நில நடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அபாயம் எதுவும் இல்லை என அவுஸ்திரேலிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் மிகவும் அரிதாகவே கடுமையான நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன.
மிக மோசமான நிலநடுக்கம் 1988 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டது. இது 6.6 ரிக்டர் அளவில் பதிவானது.
இதேவேளை, தற்போது அமெரிக்காவில் உள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக தனக்கு எந்த அறிக்கையும் வரவில்லை என்று அவர் கூறினார்.