மேதினி மறவா மே பதினெட்டு!

You are currently viewing மேதினி மறவா மே பதினெட்டு!

ஆண்டுகள் எட்டு ஒன்பது பத்து
முத்தாய்க் கடந்து பதினொன்று
கொத்துக் குண்டுகளுக்கும் நச்சு
வாயுக்களுக்கும் நாலு திசை
எறிகணைகளுக்கும் அள்ளிக்கொடுத்து
ஆறாத காயங்களோடு இன்னும்
வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறோம்…

வலிபட்ட நெஞ்சை எதைக்
கொண்டு ஆற்றுவது அறியாது
மெலியாரை வலியார் கேட்டால்
வலியாரைத் தெய்வம் கேட்குமாம்
என்று ஆறுதல் கொள்ளுவோமா
அல்லது ஆறிப்போன காயமிது
மருந்து ஏனென்று மௌனிப்போமா…

கொடுத்தது எங்கள் உறவுகள்
உயிர்களல்லவா எப்படி ஆறுவோம்
வெள்ளைக் கொடியோடு வேகும்
மன வலியோடு நம்பியிருந்தவர்
நாசமாக்கப்பட்டாரேமறப்போமா
நாலுபத்து ஆண்டுகளாய் நாம்
கட்டிக் காத்து வந்த போராட்டம்
நசிக்கப்பட்டதே எப்படிப் பொறுப்போம்…

எம் தேசத்தின் சொத்துக்களாம்
உயிர் நாடிகளாய் இலட்சியத்துக்காய்
போராடிய தளபதிகள் எங்கே
போருக்கு அஞ்சித் தாயின் மடிதனில்
தஞ்சமடைந்த குஞ்சுகள் எங்கே
இரக்கம் என்பது மருந்துக்கும் இல்லா
மா மூடரே காட்டு வாசிகளே
எப்படி எம்மவரை அழிக்க உமக்கு
மனம் வந்தது மதம் கொண்டீரோ…

எட்டு நாடுகள் கூட்டு என்கிறார்
ஏராளமான ஆயுதம் கையேந்தி
வாங்கியே உன் நாட்டு மக்களை
கொன்றொழித்த மாமூடரே
உமக்கில்லை இனி மோட்சம்
விழி மூடி மௌனம் காக்கும்
ஐ நா எனும் பொய் நாவே நீவிர்
எமக்கு மெய்யாய் நீதி தருவது எப்போ…

எமக்கொரு தேசம் கேட்டோம்
அறவழியில் நின்றோம் ..ஆயுதம்
கை தொட்டோம் இரவு பகலாய்ப்
போரிட்டோம் நீதிக்காய் ஒன்றானோம்
ஓயாது ஒடுக்கியே வந்தீர் -இன்னும்
காலங்காலமாய் ஏமாற்றி வென்றீர்
மனபலம் கொண்ட மாவீரர் தம்
கனவுகள் ஈடேற அவ்வழி தொடர்ந்த
எங்கள் அக்கினிக் குஞ்சுகளை
அழித்து அகங்காரம் கொண்டீர்…

இது மேமாதம் விழிகள்
சிவக்கின்றன வீணரே- உம்மை
நினைத்து இதயம் நோகிறது
அழித்தவரே ஆட்சியில் அமர்ந்து
ஆட்டம் காட்டுகிறீர்-ஓட்டம்
எடுக்கும் காலம் மீண்டும் வரும்
சிறைகளில் இன்னும் சிதைந்து
கொண்டிருக்கும் உறவுகளை
இனியாவது விடுதலை செய்
காணாமல் ஆக்கப்பட்டவரை
கண்டோம் என்றே அவர் பெற்றோர்
சொல்லிட வழி செய்…

எமக்கான நீதி கிடைக்கும் வரை
நீறு பூத்த நெருப்பாக நாம்
நம் தலைமுறை தொடருமே
நீதிக்கான பயணத்தை
தப்பிவிட்டோம் என்பவரெல்லாம்
தலை தெறிக்க ஓடும் காலம்
வெகு தொலைவில் இல்லை
தர்மத்தின் வாழ்வைக் கௌவிய
சூது விலகும் மீண்டும்
தர்மம் தழைக்கும் இது தமிழர்
தலை விதியை மாற்றும்
கொடுங்கோலனே எழுதி வை
உன் நாளேட்டில் இனி விடியும்
காலம் எல்லாம் ஈழத் தமிழனுக்கு
விடியல் தரும் காலம் என்றே…

✍சிவதர்சினி ராகவன் சுவிஸ்

பகிர்ந்துகொள்ள