மேற்கத்திய நாடுகளிடம் கெஞ்சும் ஜெலென்ஸ்கி!

You are currently viewing மேற்கத்திய நாடுகளிடம் கெஞ்சும் ஜெலென்ஸ்கி!

தென்பகுதி உக்ரைனை மொத்தமாக மூழ்கடிக்க திட்டமிடும் ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் எச்சரிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனின் மிகப் பெரிய நோவா ககோவ்கா அணைக்குள் ரஷ்ய துருப்புகள் வெடிகுண்டுகளை பதுக்கியுள்ளதாகவும், எந்த நேரத்திலும் அவர்கள் குறித்த அணையை தகர்க்க வாய்ப்பிருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உலக மக்கள் இந்த தருணத்தில் ஒன்று திரண்டு துரிதமாக செயல்பட வேண்டும் எனவும், ரஷ்யாவின் இந்த பயங்கரவாத செயலை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

நோவா ககோவ்கா அணையை தகர்ப்பது தென்பகுதி உக்ரைனை மொத்தமாக அழிக்கும் மிகப்பெரிய சதித் திட்டம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் ஜெலென்ஸ்கி. ஆனால், நோவா ககோவ்கா அணையை உக்ரைன் அதிகாரிகளே தகர்க்க திட்டமிட்டு வருவதாகவும், தங்கள் மீது பழி போடும் கொடூர சதி இதுவெனவும் ரஷ்யா பதிலடி அளித்துள்ளது.

உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய கிரிமியா உட்பட பல பகுதிகளுக்கு நீர்ப்பாசனமளித்து வருகிறது நோவா ககோவ்கா அணை. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் சோவியத் ரஷ்ய படைகள் இதுபோன்று ஒரு அணையை தகர்த்து, பல கிராமங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் மரணத்திற்கும் காரணமாகினர்.

அதுபோன்ற ஒரு சூழலை தற்போதும் உருவாக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள ஜெலென்ஸ்கி, ரசாயன ஆயுதங்கள் அல்லது அணு ஆயுதங்கள் பயன்பாட்டை எதிர்க்கும் அதே நிலையில் ரஷ்யாவின் இந்த அணை தகர்க்கும் முடிவையும் எதிர்க்க வேண்டும் என உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நோவா ககோவ்கா அணை தகர்க்கப்பட்டால் மொத்தமாக 80 உக்ரேனிய நகரங்கள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றே அஞ்சப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply