இந்தியாவிடமிருந்து பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆசிய ஒத்துழைப்பு ஒன்றிணைவின் ஒத்திவைக்கப்பட்ட ஒதுக்கீடுகளிலிருந்து மற்றுமொரு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிய ஒத்துழைப்பு ஒன்றிணைவின் கீழ் இறக்குமதிகளுக்காக இலங்கையால் இந்தியாவிற்குச் செலுத்தப்பட வேண்டியுள்ள 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையே இந்தியா மேற்கண்டவாறு ஒத்திவைத்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு இரு மாதங்களுக்கும் இந்தியாவிற்குச் செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கிக்குச் செலுத்துகின்றனர்.
அவ்வாறு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை ஒத்திவைப்பதற்கு இந்தியா இணங்கியுள்ளது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக இந்தியாவிடமிருந்து பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இருப்பினும் இது இன்னமும் கலந்துரையாடல் மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவினால் எரிபொருள் கொள்வனவிற்காக கடனடிப்படையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.