திலீபனின் நிகழ்வுக்கு மேலும் தடை உத்தரவு!

You are currently viewing திலீபனின் நிகழ்வுக்கு மேலும் தடை உத்தரவு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு அமைச்சே தீர்மானிக்கும் என்று அறிவித்தது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ஆம் பிரிவின் 4ஆம் உப பிரிவின் கீழ் பொதுத் தொல்லை ஏற்படும் என்று பொலிஸாரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை (செப்.14) அழைக்கப்பட்டது. அதன்போது நினைவேந்தலுக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் கட்டளையிடப்பட்டது.

அந்த தடையை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்ற கட்டளைக்காக வழக்கு கடந்த 21ஆம் திகதி அழைக்கப்பட்டது. அதன்போது தடையை நீக்கக் கோரி பிரதிவாதிகள் சார்பில் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது. அத்தோடு பொலிஸாராலும் தடையை நீடிக்கக் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தடையை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளைக்காக வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் வழக்கு கட்டளைக்காக அழைக்கப்பட்டது.

“மன்றினால் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை மேலும் 14 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. அதனை மேலும் நீடிக்க வேண்டுமாயின் சட்டம் ஒழுங்கு அமைச்சு (உள்ளகப் பாதுகாப்பு) வர்த்தமானி மூலம் அறிவிக்கவேண்டும். அதனால் இந்த வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது” என்று கட்டளையிட்டார்.

பகிர்ந்துகொள்ள