மே 18 – உலகில் கடைசித் தமிழன் இருக்கும் வரை மறக்கமாட்டான்!

You are currently viewing மே 18 – உலகில் கடைசித் தமிழன் இருக்கும் வரை மறக்கமாட்டான்!

மரணித்த மனிதத்தை மறக்க முடியாமல் தவிக்கும் தமிழீழ மக்களின் மாபெரும் துயரேந்தும் இன்றைய நாள்  மே 18. இந்த நாளை உலகில் கடைசித் தமிழன் இருக்கும் வரை மறக்கமாட்டான் என்பது திண்ணமே. 

தமிழீழ விடுதலை நோக்கி நகர்ந்த 3 தசாப்தம் கடந்த போராட்ட வரலாறு.. முள்ளி வாய்க்கால் என்னும் மண்ணில் எத்தனையோ இலட்சம் மக்களின் குருதியில் விதைக்கப்பட்ட வலிமிகு நாள் இந் நாள் ஆகும்..அந்தக் குருதியில் நீந்திப் பிழைத்து வந்த மக்களின் மனங்களில் இன்னும் அந்தக் குருதியின் வாடை நீங்கவில்லை ..!

பிஞ்சுக் குழந்தைகள் தொடக்கம் கற்பிணித்தாய்மார்கள் முதியவர்கள்  வரை  கொத்துக் கொத்தாய் தமிழ் இனத்தை காவு கொண்ட நாள் இந்நாள் .. இன அழிப்பை அறங்கேற்றிய உலக நாட்டின் அருவருப்பான கோழைத்தனங்களையும் சுமந்து நிற்கத் தவறவில்லை.

உடைமைகள் இழந்து ,உறவுகளைத் தொலைத்து காணாமல் போனவர்கள் ,சரணடைந்து சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் , ஏதிலியாய் உயிரைக் கையில் பிடித்துத் தட்டுத் தடுமாறி கறையேறியவர்கள், சிறைகளில் காலவரை அற்று வாழ்பவர்கள்.. இன்னும் இருக்கிறார்களா ?இல்லையா ? என்று எதையுமே அறியாமல் பதினொரு ஆண்டுகளாய் எந்த நீதி நியாயங்களும் கிடைக்காமல் தடுமாறி நிற்கும் உறவுகள். . எம் இனத்தின் மிகக் கொடிய கலங்கடிக்கும் வரலாற்றைச் சுமந்து நிற்கிறது இந்த முள்ளிவாய்க்கால் மண்ணும் மே 18ஆம் நாளும்..

ஒப்பற்ற இராணு அமைப்பையும் , மதிநுட்ப புலனாய்வுத் துறைகளையும் , கடற்படை , தரைப்படை , வான் படை என முப்படைகளையும் உருவாக்கி ஓர் கட்டுக்கோப்பான போராட்ட விதிகளுக்கு உட்பட்டு உலக வல்லரசுகளையே தொடை நடுங்க வைத்த வீரம் … ! விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கிய வீர மறத்தமிழ் அன்னை ஈன்றெடுத்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெரும் படை .

. ! முள்ளிவாய்க்கால் மண்ணுற்குள் எப்படி முடங்கியது என்பதை இன்று வரை யாராலும் கண்டறிய முடியாத மர்ம முடிச்சாகவே இருக்கிறது .. எந்த ஒரு அமைப்பாலும் அத்தனை சாதாரணமாக நெருங்கவே முடியாத போராட்ட நுட்பங்களைச் சுமந்து நின்ற தமிழ் இனத்தின் விடுதலை வீரம் தரங்கெட்ட நயவஞ்சனைக்குள் சிக்கிக் கொண்ட துயரத்தின் வடுக்கள் என்றுமே மறையாது என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம் இந்நாளில்..!

தமிழ் மணம் கமழும் வரை தமிழீழம் தந்த வீரத் தாகம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும். முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்ட உயிர்கள் பெரு விருட்சமாகி எம் இன அழிப்பிற்கு பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று ஆணித்தரமாய் கூறிக்கொண்டு .. தசைத்துண்டுகளுக்குள் கரைபுரண்டோடிய இரத்த ஆற்றில் குளித்து கடைசி யுத்தத்தில் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய அத்தனை தமிழ் வீரமறவர்களுக்கும் , மக்களுக்கும் வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரம் அவர்களின் இலட்சியமான தமிழீழம் என்ற உயரிய தேசத்தை அடைய ஒற்றுமையோடு வழி கோலுவதைத் தவிர வேறொன்றும் அறிந்திருக்கவில்லை நாம்.. தாய் மண்ணில் ஒப்பற்ற தாகத்தால் தவித்திருக்கும் ஒவ்வொரு தமிழனின் சார்பிலும் தமிழீழ மண்ணை வணங்கி எம் மண்ணில் விதையான அத்தனை உயிர்களுக்குமாய் வீர வணக்கத்தையும் , நினைவு வணக்கத்தையும்  காணிக்கை ஆக்குகிறோம்


“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
நன்றி வணக்கம்..!”

பகிர்ந்துகொள்ள