மத்திய தரைக்கடல் புயல் டேனியல் லிபியாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், 2,000 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. பெரும் வெள்ளம் பல கிராமங்களை அடித்துச் சென்றதுடன் வட ஆபிரிக்க நாட்டின் கிழக்கில் பல கடற்கரை நகரங்களில் குடியிருப்புகளை மொத்தமாக சிதைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் முன்பு சிக்கியிருந்த Derna நகரம் மொத்தமாக மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமை இரவு வெளியான தகவலின் அடிப்படையில், பெருவெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 61 என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் Derna நகரில் இறந்தவர்கள் எண்ணிக்கையை அதில் குறிப்பிடவில்லை என்றே கூறுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாக, அவர்கள் பெருவெள்ளத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், கிழக்கு லிபிய அரசாங்கத்தின் பிரதமர் ஒசாமா ஹமாத் தெரிவிக்கையில், டெர்னா நகரில் மொத்தம் 2,000 பேர் வரையில் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக நம்பப்படுகிறது. டெர்னா பகுதி பேரிடர் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். இதனிடையே, டெர்னா நகரில் 5,000 முதல் 6,000 பேர்கள் வரையில் மாயமாகியுள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை கண்டிப்பாக 2,000 தாண்டும் என முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் கன மழையையடுத்து அருகில் இருந்த இரண்டு அணைகள் இடிந்து விழுந்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என கிழக்கில் உள்ள நாட்டின் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் அல்-மோஸ்மரி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ள தகவலின் படி டெர்னாவில் நிலைமை மிகவும் மோசம் எனவும் மின்சாரம் அல்லது தகவல் தொடர்பு வசதிகள் என மொத்தமும் துண்டிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில், மலைப்பகுதியில் அமைந்துள்ள பல கிராமங்கள் தரைமட்டமானதுடன், இறப்பு எண்ணிக்கை தற்போது 2,800-ஐ கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது