கொரோனாத் தொற்று காரணமாக யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக நேற்யை தினம் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
யாழ். மாவட்டம், கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இதையடுத்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு நேற்றைய தினம் (ஏப்-14) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் உக்கிர குருதி விஷமடைவு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹிரிவடுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான ஆண் ஒருவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோய் பாதிப்புகளே இவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 602 இல் இருந்து 604 ஆக அதிகரித்திருப்பதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.